அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்!…

பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்!…

பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்!… post thumbnail image
புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக பொறுப்பு ஏற்ற கமல்நாத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையின் முதல் நாள் அலுவலை முறைப்படி தொடங்கி வைத்தார். பாராளுமன்ற செயலாளர் ஸ்ரீதரன் எழுந்து, 16வது மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள புதிய எம்.பி.க்கள் பட்டியலை அவையில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து அந்த புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட வேண்டும். ஆனால் மத்திய மந்திரி கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முதலில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு முண்டேயின் பணிகளை நினைவு கூர்ந்து கமல்நாத் பேசினார்.இதையடுத்து சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்ற மக்களவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. அப்போது புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து சபையின் மூத்த எம்.பி.யான அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா பதவி ஏற்றனர்.

பிறகு கமல்நாத்துக்கு உதவ தேர்வான 3 எம்.பி.க்கள் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் சார்ந்த கட்சிகளின் அகர வரிசைப்படி பதவி ஏற்றுக் கொள்ள அழைக்கப்பட்டனர். அதன்படி ஒவ்வொரு எம்.பி.க் களாக வந்து பதவி ஏற்று மக்களவை செயலக புத்தகத்தில் கையெழுத்திட்டு சென்றனர். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமஸ்கிருதத்திலும், பொன்.ராதாகிருஷ்ணன் தமிழிலும் உறுதிமொழி கூறி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
500க்கும் மேற்பட்டவர்கள் பதவி ஏற்க வேண்டியிருப்பதால் வேகம், வேகமாக பதவி ஏற்பு நடத்தப்பட்டது. புதிய எம்.பி.க்கள் ஒவ்வொரு வருக்கும் தற்காலிக சபாநாயகர் கமல்நாத் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். கமல்நாத்துக்கு முன்று மூத்த எம்.பி.க்களான பி.ஏ.சங்மா, பைரன்சிங் இன்க்டி, அர்ஜுன் சரன் சேத்தி ஆகியோர் தேவையான உதவிகள் செய்தனர். மொத்தம் 539 எம்.பி.க்களுக்கு கமல்நாத் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டியதுள்ளது.

எனவே புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நாளை (வெள்ளிக்கிழமை)யும் தொடர்ந்து நடைபெறும். நாளை மதியத்துக்குள் புதிய எம்.பி.க்கள் அனைவரும் பதவி ஏற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் இந்த தடவை மொத்தம் உள்ள 543 எம்.பி.க்களில் 315 பேர் புதுமுகங்கள் ஆவார்கள். அவர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் புதிய அனுபவமாக இருந்தன. இதனால் அவர்களது பதவி ஏற்புக்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இந்த தடவை பதவி ஏற்பவர்களில் வயதில் மிகவும் மூத்தவர் அத்வானி ஆவார். அவருக்கு 86 வயதாகிறது. துஷ்யந்த் சவுதாலா, ஹீனா கவித் ஆகிய இரு எம்.பி.க்களுக்கு 26 வயதே ஆவதால் அவர்கள் இருவரும் மிக இளம் எம்.பி.க்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.நாளை பிற்பகல் எம்.பி.க் கள் பதவி ஏற்பு முடிந்ததும் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். 9ம் தேதி பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுவார். 10, 11ம் தேதிகளில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி பேசுவார். 11ம் தேதி பாராளுமன்ற கூட்டம் நிறைவு பெறும். ஜூலை முதல் வாரம் பாராளுமன்றம், பட்ஜெட் தாக்கலுக்காக மீண்டும் கூட்டப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி