முதல்வர் ஜெயலலிதா இன்று தில்லி பயணம்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு பகல் 11.30 மணிக்கு தில்லி சென்றடைகிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அவரை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவு 65 ஆயிரம் கிலோ லிட்டர் என்ற அளவில் இருந்து பாதியாகக் குறைக்கப்பட்டது.இது தொடர்பாக, மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மண்ணெண்ணெய் ஒதுக்கீடு போன்று, அரிசி ஒதுக்கீட்டின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் அளவை முன்பு போலவே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது.

காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தும் அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்துவதில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு போதிய அக்கறை காட்டவில்லை. அதை அமைக்க புதிய அரசை வலியுறுத்துவார் என்று தெரிகிறது.முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு மற்றும் கேரள, தமிழக அரசுகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, குழுவில் இடம்பெறவுள்ள தனது பிரதிநிதியை அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு மற்றும் கேரள மாநில அரசு அவற்றின் பிரதிநிதிகளை அறிவிக்கவில்லை. இது தொடர்பான கோரிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்துவார் என தெரிகிறது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.அண்மையில் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக பிரதமரிடம் நேரிலும் வலியுறுத்துவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் காவல் துறையை மேலும் நவீனமயமாக்கவும், மாநிலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் கூடுதல் நிதியை மத்திய அரசிடம் இருந்து கோருவார் என்றும், பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்கவும் வலியுறுத்துவார் என்றும் தெரிகிறது.மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் கூடுதலாகவே பலம் இருந்தாலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், முக்கிய மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் சிக்கல் எழும்.

இந்நிலையில், அதிமுகவுக்கு மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவையில் 37 பேர் இருக்கிறார்கள்.எனவே, இரு அவைகளிலும் பாஜக அரசால் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு அதிமுகவின் ஆதரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.அவற்றுக்கு ஆதரவு தரும்படி அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொள்வார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: