அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!…

மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!…

மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!… post thumbnail image
ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிவடைந்து ராமேசுவரம் பாம்பன் மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 770 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.கச்சத்தீவு–தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் வலைகளை விரித்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென இலங்கை கடற்படையினர் சிறிய ரோந்து படகுகளில் மின்னல் வேகத்தில் அங்கு வந்து ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

பின்னர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி குதித்த சிங்கள கடற்படையினர் அதில் இருந்த வலைகளை அறுத்து எறிந்து கடலில் வீசினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கொள்ளையடித்து தங்களது ரோந்து படகுகளில் அள்ளிப் போட்டனர். மேலும் ஒரு சில மீனவர்களை தாக்கவும் செய்தனர்.எத்தனை முறை சொன்னாலும் நீங்கள் இங்கு வந்து மீன் பிடிக்கிறீர்கள். உங்களை சும்மா விடமுடியாது என்று கூறி 29 மீனவர்களை கைது செய்து 6 படகுகளையும் சிறைபிடித்து அந்த படகுகளில் மீனவர்களை ஏற்றிக் கொண்டு தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இன்று காலையில்தான் ஒவ்வொரு படகாக கரை திரும்பி கொண்டு இருக்கிறது. எனவே இனிதான் சிறைபிடித்து செல்லப்பட்ட 29 மீனவர்கள் யார்–யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என மீனவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுதான் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்பட்டு வந்தனர்.

தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றபோது இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதையொட்டி நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் அனைவரையும் ராஜபக்சே விடுதலை செய்து இருந்தார். இதனாலும், மோடி தலைமையில் மத்தியில் புதிய அரசு அமைந்து விட்டதாலும் சிங்கள கடற்படை தங்களது வால் தனத்தை மீண்டும் காட்டாமல் இருப்பார்கள் என மீனவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால் சிங்கள கடற்படையினர் அவர்களது சுயரூபத்தை மீண்டும் காட்டி இருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி