செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: பைனலுக்கு முன்னேறுமா சென்னை?…

ஐ.பி.எல்: பைனலுக்கு முன்னேறுமா சென்னை?…

ஐ.பி.எல்: பைனலுக்கு முன்னேறுமா சென்னை?… post thumbnail image
மும்பை:-ஏழாவது ஐ.பி.எல்., தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கோல்கட்டா ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில் சென்னை அணி பஞ்சாப்பை சந்திக்கிறது.ஐ.பி.எல்., வரலாற்றில் 2008, 2010 முதல் 2013 வரை என, ஐந்துமுறை பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி இரு கோப்பை வென்றது. 2009ல் மட்டும் அரையிறுதியுடன் திரும்பியது.

இம்முறை புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை, ‘எலிமினேட்டர்’ போட்டியில் மும்பை வீழ்த்தியது. இருப்பினும், இன்றைய போட்டியில் பஞ்சாப்பை வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.பேட்டிங்கில் ஸ்மித் (559 ரன்கள்), ரெய்னா (436), மெக்கலம் (394), டுபிளசி (303) என, இணைந்து ‘டாப் ஆர்டரை’ கவனித்துக் கொள்கின்றனர். டேவிட் ஹசி, கடந்த இரு போட்டிகளில் கைகொடுக்கத் துவங்கியுள்ளார். இது கேப்டன் தோனிக்கு உதவுவதால், ‘பினிஷிங்’ எளிதாகிறது.இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மாவுக்கு (22 விக்.,), ‘சீனியர்’ ஆஷிஸ் நெஹ்ரா உதவினால் நல்லது.

சுழலில் ஜடேஜா (19 விக்.,), அஷ்வின் (15 விக்.,) கூட்டணி கைகொடுக்கிறது. எனினும், பஞ்சாப் அணிக்கு எதிரான 2 லீக் போட்டியில் அஷ்வின் 6 ஓவரில் 79 ரன்கள், ஜடேஜா 7 ஓவரில் 80 ரன்கள் என, வாரி வழங்கியது சற்று சிக்கல் தான்.லீக் சுற்றில் 11 வெற்றியுடன் முதலிடத்தில் இருந்த பஞ்சாப், கோல்கட்டாவுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்றில் தோற்றது. சென்னைக்கு எதிரான இரு லீக் போட்டிகளில் 95, 90 ரன்கள் எடுத்து அதிரடியில் மிரட்டிய மேக்ஸ்வெல் (539 ரன்கள்), கடைசியாக களமிறங்கிய 4 இன்னிங்சில் 14, 2, 0, 6 என, ஏமாற்றினார்.இன்றும் இவரை விரைவில் அவுட்டாக்குவது முக்கியம். மில்லர், சேவக், வோரா, சகா, கேப்டன் பெய்லியும் ரன்குவிப்பில் ஈடுபட முயற்சிக்கலாம்.
பவுலிங்கில் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய சந்தீப் சர்மா, இன்று களமிறங்குவாரா எனத் தெரியவில்லை. இருப்பினும், அவானா, மிட்சல் ஜான்சன், இளம் வீரர் கரன்வீர் சிங் கூட்டணி கைகொடுக்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி