அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…

நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…

நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி… post thumbnail image
சென்னை:-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று எண்ணிக்கை முடிவு சுமார் 10 மணி அளவில் வெளியாகும் என்று நம்புகிறேன். எனவே தேர்தல் முடிவுகளை காலை 10 மணியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

தேர்தல் முடிவுகள் அனைத்தையும், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையும் முடிய, முடிய உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டும். ஓட்டு எண்ணிக்கையை வெப்காஸ்டிங் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, நேரில் பார்ப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஓட்டு எண்ணும் பணியை பார்வையிடுவதற்கு தலைமைச் செயலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இணையதளத்தின் மூலம் நேரடியாக மக்களும் பார்வையிடுவதற்கு வசதிகளை செய்யலாமா என்று ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் பொதுமக்கள் வரக்கூடாது. எண்ணிக்கை விவரங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்காக மையங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி வசதி செய்துதரப்படும்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் வர முடியாது.வெற்றி பெற்ற வேட்பாளர்கள், சான்றிதழை வாங்கும்போது அவர்களை அனுமதிக்கலாமா என்பது பற்றி இந்திய தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக எடுத்துக்கொண்டால், சராசரியாக 20 அல்லது 21 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். தடங்கல் இல்லாமல் ஓட்டு எண்ணிக்கை நடந்தால், மாலை 6 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும்.தடங்கல்கள் வந்தால்கூட, எந்த இடைவெளியும் விடப்படாமல் விடிய, விடிய ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கையின்போது சாப்பாட்டுக்கென்று இடைவெளி விடப்படாது.

வாக்கு எண்ணிக்கையின்போது 59 தேர்தல் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழை பெறுவதற்கு முன்பு நடத்தும் கொண்டாட்டங்கள் அனைத்தும் அவரது தேர்தல் செலவு கணக்கில் சேரும்.ஓட்டு எண்ணிக்கையின் போது தேர்தல் செலவு உதவி பார்வையாளர்கள் பணியாற்றுவர். இவர்கள் உள்ளூரில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களாகும்.தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். மறுவாக்குப்பதிவு இல்லாத நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மேலும் தளர்த்துவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மையத்துக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். முதல் வட்டத்தில் மத்திய போலீஸ் படையும், அடுத்த வட்டத்தில் மாநில சிறப்பு போலீசாரும், மூன்றாவது வட்டத்தில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

ஒருவாக்கு எண்ணிக்கை மையத்தில் 377 முதல் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 13 ஆயிரத்து 626 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.தேர்தலின் போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.எனவே அந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கைக்காக மேஜைகளின் எண்ணிக்கையை 14-ல் இருந்து 30 ஆக உயர்த்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. வடசென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால், அங்கு மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு 7 மேஜைகள்தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கும் 14 மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று பொதுவான புகார்கள்தான் இருந்தது. பெரிய அளவில் புகார்கள் கூறப்படவில்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடந்ததை வைத்தே, தமிழக மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.யாருமே பணம் வாங்காமல் ஓட்டு போட்டிருந்தால், இந்த தேர்தல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி