செய்திகள்,திரையுலகம் பார்வையற்றவர்களை சந்தித்த நடிகர் ரஜினியின் நெகிழ்ச்சி!…

பார்வையற்றவர்களை சந்தித்த நடிகர் ரஜினியின் நெகிழ்ச்சி!…

பார்வையற்றவர்களை சந்தித்த நடிகர் ரஜினியின் நெகிழ்ச்சி!… post thumbnail image
பெங்களூர்:-பெங்களூருவில் டாக்டர் பி.கே.பால் என்பவர் ஐடியல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பார்வையற்றவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள்.

மைசூர் வந்தபோது மைசூர் பகுதியில் ரஜினியின் படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்டிருந்த பார்வையற்ற மாணவ, மாணவிகள் ரஜினியை தொட்டு பார்க்க வேண்டும், அவர் குரலை கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். உடனடியாக அவர்கள் வந்த வாகனம் மாண்டியாவுக்கு திரும்பியது. அவர்களுக்கு படப்பிடிப்பு எங்கு நடக்கிறது என்பது தெரியவில்லை. அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தபோது மெலுகோட்டை பகுதியில் நடந்து வருவதாக சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக வாகனம் மெலுகோட்டை நோக்கி திரும்பியது.

அங்கு மழை காரணமாக லிங்கா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்டேசை சந்தித்த அவர்கள் ரஜினியை பார்க்க நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருப்பதாக கூறினார்கள். தயாரிப்பாளரும் கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினியிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். அடுத்த நிமிடமே தானே குடையை எடுத்து விரித்து பிடித்துக் கொண்டு வந்தார் ரஜினி. அவர் பார்வையற்றவர்களின் அருகில் வந்து நான் ரஜினிகாந்த் வந்திருக்கேன் எல்லோரும் சவுக்கியமா இருக்கீங்களா? என்னை பார்க்க இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வரணுமா? என்று கன்னடத்தில் கேட்டார். உடனே அவர்கள் உங்களை பார்க்க நாங்க இமயமலைக்குகூட வந்துடுவோம் என்றதும். ரஜினி லேசாக கண்கலங்கி விட்டார். அவர்களை கட்டிபிடித்தும், முத்தம் கொடுத்தும் அவர்கள் பேசச் சொன்ன வசனங்களை பேசிக் காட்டியும் அவர்களை சந்தோஷப்படுத்தினார்.

அவர்களில் ஒரு பெண் தான் கொண்டு வந்திருந்த கன்னட நடிகர் ராஜ்குமார் படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார். பத்திரமா ஊருக்கு போங்க உங்க டிரஸ்ட்டுக்கு ஒருநாள் கண்டிப்பா வந்து உங்களை மீட் பண்றேன் என்று கூறி அவர்களுக்கு மதிய உணவு கொடுக்குமாறு கூறிவிட்டுச் சென்றார். என் முகமே அவர்களுக்கு தெரியாது. வெறும் என்னோட குரலை மட்டும் வச்சிக்கிட்டு இவ்ளோ நேசிக்கிறாங்களே இவர்களுக்கெல்லாம் நான் என்ன திருப்பிக் கொடுக்கப்போறேன் என நண்பர்களிடம் கலங்கி இருக்கிறார் ரஜினி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி