செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்தியாவில் மே 2ம் தேதி முதல் ஐபிஎல்!…

இந்தியாவில் மே 2ம் தேதி முதல் ஐபிஎல்!…

இந்தியாவில் மே 2ம் தேதி முதல் ஐபிஎல்!… post thumbnail image
புதுடெல்லி:-7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதே கால கட்டத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுவதால் ஐ.பி.எல். போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் (20 லீக் ஆட்டங்கள்) ஐக்கிய அரபு எமிரேட்சில் (துபாய், அபுதாபி, ஷார்ஜா) வருகிற 16-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

2-வது கட்ட ஆட்டங்களை பாராளுமன்ற தேர்தல் நிறைவடையும் மாநிலங்களில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. அனுமதி கிடைக்காவிட்டால் 2-வது கட்ட ஆட்டங்கள் மே 2 முதல் மே 12-ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் மே 2-ந் தேதி முதல் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல், இடைக்கால தலைவர் சுனில் கவாஸ்கர் ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் (மே 2-ந்தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் மோதுகின்றன.இந்தியாவில் நடைபெறும் எஞ்சிய 40 ஆட்டங்களும் ராஞ்சி, மும்பை, டெல்லி, பெங்களூர், ஆமதாபாத், கட்டாக், ஐதராபாத், கொல்கத்தா, சென்னை, மொகாலி ஆகிய 10 நகரங்களில் நடக்கிறது.இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே 27 மற்றும் 28-ந் தேதியும் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மே 30 மற்றும் ஜூன் 1-ந் தேதியும் நடைபெறுகிறது.

மே 1, மே 16, மே 17 ஆகிய தேதிகளில் ஆட்டம் எதுவும் கிடையாது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் பிரச்சினை நீடிப்பதால் ஜெய்ப்பூரில் இந்த சீசனில் எந்த ஆட்டங்களும் கிடையாது. இதற்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புகழ்பெற்ற சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்த முறை வெறும் 4 ஆட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. மே 18-ந்தேதி சென்னை-பெங்களூர் அணிகளும், மே 22-ந்தேதி சென்னை-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் சந்திக்கின்றன.மேலும் இறுதிப்போட்டிக்கான இரண்டு தகுதி சுற்றும் (மே 27, 28) நடைபெறுகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை மே 2-ந் தேதி முதல் இந்தியாவில் நடத்த அனுமதி அளித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். நிர்வாகமும் நன்றி தெரிவித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி