செய்திகள் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை!…

சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை!…

சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை!… post thumbnail image
திருப்பதி:-சென்னையில் இருந்து நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் குண்டூர் வழியாக செகந்திராபாத் நோக்கி சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. குண்டூர் மாவட்டம் பிடுகுராள்லா சென்னசமுத்திரம் இடையே அதிகாலை 3 மணியளவில் சிக்னல் காரணமாக ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, 10 பேர் கொண்ட கும்பல் கத்தி, கோடரிகளுடன் முன்பதிவு செய்யப்பட்ட 2 பெட்டிகளில் ஏறினர்.

அதிகாலை நேரம் என்பதால் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு எழுந்த சில பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூச்சலிட முயன்றபோது கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி கூச்சல் போட்டால் கொன்று விடுவோம் என எச்சரித்தனர். இதையடுத்து, அவர்கள் அமைதியாயினர்.பிறகு, கொள்ளை கும்பல் பயணிகளிடம் இருந்த நகை, பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ஏராளமான நகைகள், லட்சக்கணக்கான பணம் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் ரயில் அருகே உள்ள நடிகுடி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது நகை, பணத்தை பறிக்கொடுத்தவர்கள் அலறிக்கூச்சலிட்டனர். இதனால் ரயில் 30 நிமிடம் அங்கு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் ரயில் ஐதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையம் வந்தடைந்ததும் பயணிகள் 9 பேர் ரயில்வே போலீசில் புகார் செய்தனர். அதில் எஸ்11 ரயில் பெட்டியில் உள்ள 24வது பெர்த்தில் அமர்ந்திருந்த மர்ம நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும், சம்பவம் நடந்த பின்னர் அந்த நபர் மாயமானதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மினி கம்ப்யூட்டர்கள், விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.தகவல் அறிந்ததும் ரயில்வே எஸ்பி ஷியாம் பிரசாத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் துப்பாக்கியால் சுடவும் தயங்க மாட்டோம். கோடை காலம் என்பதால் ரயிலில் ஏராளமான பயணிகள் காற்றுக்காக கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து பயணம் செய்கின்றனர். இதனால் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுகிறது. வரும் கோடை காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி