செய்திகள் ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு தடை!…

ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு தடை!…

ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு தடை!… post thumbnail image
திஹேக்:-கடந்த 1986 ஆம் ஆண்டில் கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுவதில்லை என்ற ஒப்பந்தத்தில் ஜப்பான் கையொப்பம் இட்டிருந்தது. ஆனாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தும்விதமாக 2005ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக என்று கூறி அந்நாடு திமிங்கலங்களை வேட்டையாடத் தொடங்கியது. ஜப்பானில் திமிங்கலங்களின் இறைச்சி விற்பனை வணிகரீதியாக நடைபெற்று வருகின்றது. ஜப்பான் திமிங்கல வேட்டையை நிறுத்தவேண்டும் என்று பாதுகாப்பு அடிப்படையில் ஆட்சேபித்த ஆஸ்திரேலியா மற்றும் சில மேற்கத்திய நாடுகளுடன் அந்நாடு மோதல் போக்கை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது. தீர்ப்பினைப் படித்த நீதிபதி பீட்டர் டோம்கா, 12-க்கு நான்கு என்ற வாக்குகளின் அடிப்படையில் அண்டார்டிகா பகுதியில் ஜப்பான் நடத்தி வந்த திமிங்கல வேட்டை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.கடந்த 2005ஆம் ஆண்டில் ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ள ஜப்பான் இதுவரை 3600க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை வேட்டையாடியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆய்வின் வெளியீடு குறைவாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்தத் தீர்ப்பானது சட்டபூர்வமாகப் பிணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் கலாச்சார விதிமுறைகளைத் தங்களின் மேல் திணிப்பதாக வாதிட்ட ஜப்பான் இறுதியில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றத்தையும், ஆழ்ந்த வருத்தத்தையும் அளிப்பதாக இருக்கின்றது என்றும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது. அறிவியல் போர்வையில் நடைபெறும் இந்த வேட்டை இப்போது ஒரேயடியாக நிறுத்தப்பட முடியும் என்று இங்கிலாந்தின் கிரீன்பீஸ் இயக்கத்தின் தகவல் தொடர்பாளரான வில்லி மெக்கென்சி இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி