20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…

விளம்பரங்கள்

மிர்புர்:-5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி இன்று தொடங்குகிறது.சூப்பர்-10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிர்புர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. பரம எதிரிகள் மல்லுகட்ட இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இந்த ஆட்டத்தின் மீது திரும்பியுள்ளது.தென்ஆப்பிரிக்க தொடர், நியூசிலாந்து பயணம், ஆசிய கோப்பை போட்டி என்று வரிசையாக தோல்விகளை தழுவிய இந்திய அணி இழந்த பெருமையை மீட்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. முந்தைய தோல்விகளுக்கு பரிகாரம் தேடிக்கொள்ள இதைவிட சிறந்த களம் கிடைக்காது. காயத்தால் ஆசிய கிரிக்கெட்டில் ஆடாத கேப்டன் டோனி அணிக்கு திரும்பியிருப்பதும், கடைசி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்றதும் நமது அணிக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் தொடர்ந்து சறுக்கலை சந்தித்தாலும், மிடில் வரிசை தான் இப்போது இந்திய அணியின் முதுகெலும்பாக தாங்கிப்பிடிக்கிறது. விராட் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, கேப்டன் டோனி இவர்களின் ஆட்டத்தை பொறுத்தே இந்திய அணியின் ஸ்கோர் அமையும் என்பதில் சந்தேகமில்லை. யுவராஜ்சிங் இன்னும் 65 ரன்கள் எடுத்தால் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெறுவார்.2012-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி வெறும் ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் (3 வெற்றி, 2 தோல்வி) மட்டுமே விளையாடியிருக்கிறது. அந்த போட்டிகளில் இந்திய வீரர்களில் யுவராஜ்சிங் தவிர வேறு யாரும் அரைசதம் கண்டதில்லை. ஆனாலும் ஐ.பி.எல். அனுபவம் இங்கு கைகொடுக்கும் என்று கேப்டன் டோனி அடித்து சொல்கிறார். மிர்புர் ஆடுகளம் பொதுவாக நன்கு சுழன்று திரும்பக்கூடிய மெதுவான (ஸ்லோ) ஆடுகளம். எனவே அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பு அசாதாரணமானதாக இருக்கும். 2007-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு இந்திய அணி, ஒவ்வொரு முறையும் அரைஇறுதிக்கு முன்பாகவே வெளியேறி விடுகிறது. இந்த தடவை சோகத்துக்கு முடிவு கட்டுவார்களா? என்று பார்க்கலாம்.

இந்தியாவுக்கு பேட்டிங் பலம் என்றால், பாகிஸ்தானுக்கு பந்து வீச்சு பிரதான அஸ்திரம். குறுகிய நேர கிரிக்கெட்டில் எளிதில் கணிக்க முடியாத அபாயகரமான ஒரு அணி பாகிஸ்தான். 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களான சயீத் அஜ்மல் (81 விக்கெட்), உமர்குல் (74 விக்கெட்), அப்ரிடி (73 விக்கெட்) அனைவரும் அந்த அணியில் உள்ளனர்.அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை வென்றதால் பாகிஸ்தானின் நம்பிக்கை மேலும் அதிகமாகியுள்ளது. ‘இந்தியாவுடன் போட்டி என்றாலே உச்சகட்ட நெருக்கடியும், எதிர்பார்ப்பும் நிலவுவது சகஜம். எனவே பாகிஸ்தான் வீரர்கள் தோல்வி பயமின்றி, இயல்பாக விளையாட வேண்டும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவீத் மியாண்டட் அறிவுரை வழங்கியுள்ளார்.20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் எல்லா தடவையும் அரைஇறுதியை தாண்டிய ஒரே அணி பாகிஸ்தான் அணி. அந்த சிறப்பை தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.தொடக்க ஆட்டத்தின் வெற்றி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றியை தட்டிப்பறிக்க இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்பதால் முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை பரபரப்புக்கு குறைவிருக்காது.இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்திய அணி விளையாடும் ஆட்டங்களை தூர்தர்ஷனிலும் காணலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: