அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?…

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?…

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?… post thumbnail image
சென்னை:-1967–ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து கணிசமான எம்.பி. தொகுதிகளை கைப்பற்றியது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு உதவுவது, மாநிலத்தில் திராவிட கட்சி ஆட்சிக்கு ஆதரவு என்ற பார்முலாவை கடைபிடித்தது.

ஆனால் அதன் பிறகு மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவு குறைந்ததால் கூட்டணி கட்சிகளுக்கும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கொடுத்தது. அதன்படி மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அரசில் 9 ஆண்டுகளாக தி.மு.க. அங்கம் வகித்தது.ஆனால் இரு கட்சிகளுக்கும் 2ஜி வழக்கு, இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்டவைகளால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை தி.மு.க. அமைத்தது மீண்டும் கூட்டணியில் சேர காங்கிரஸ் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தது. ஆனால் காங்கிரசை சேர்க்க தி.மு.க. மறுத்துவிட்டது.
பழைய காலங்களில் காங்கிரசை தி.மு.க. கைவிட்டால் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து கொள்ளும், அ.தி.மு.க. சேர்க்க மறுத்தால் தி.மு.க.வுடன் காங்கிரஸ் சேர்ந்து விடும். இந்த வகையில்தான் 1967–ம் ஆண்டு முதல் காங்கிரஸ் இருந்து வந்தது.

ஆனால் தற்போது முதல் முறையாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இல்லாமல் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் காங்கிரசுடன் சேர மறுத்து பா.ஜனதா அணியுடன் கூட்டணி வைத்துள்ளன.தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டதால் அந்த கட்சி தலைவர்கள் தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய மந்திரி ஜி.கே. வாசன் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் தமிழ் நாடு முழுவதும் வேட்பாளர்கள் வெற்றிக்கு பிரசாரம் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.இதேபோல் முன்னாள் தலைவர் தங்கபாலுவும் போட்டியிட மறுத்து விட்டார். மற்ற முக்கிய தலைவர்களும் போட்டியிட தயங்குவதாக கூறப்படுகிறது.

மத்திய மந்திரி ப.சிதம்பரம் கடந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பன் 3,30,994 ஓட்டுகளும், ப.சிதம்பரம் 3,34,348 ஓட்டுகளும் பெற்றனர். 3,825 ஓட்டுகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.எனவே இந்த முறை சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறும் போது, சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்துக்கு பதில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்பது பற்றி கட்சி இன்னும் முடிவு- செய்யவில்லை என்றார்.ஞானதேசிகன் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் பலர் தேர்தலில் போட்டியிட தயங்குவதை அறிந்த காங்கிரஸ் மேலிடம் மூத்த தலைவர்கள் கண்டிப்பாக மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறிவிட்டது.இதுவரை எம்.பி. பதவியை அனுபவித்தவர்கள் இக்கட்டான நேரத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்குவதை கட்சி மேலிடம் விரும்ப வில்லை. மூத்த தலைவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டால் அது காங்கிரசை தேர்தலுக்கு முன்பே பலவீனப்படுத்தி விடும் என்றும் கருதுகிறது.இதைத் தொடர்ந்து தான் கடந்த முறை ஈரோடு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த இளங்கோவன் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.காங்கிரஸ் பட்டியலில் தற்போதைய எம்.பி.க் களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், மற்ற தொகுதிகளில் புதுமுகங்கள், இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி