செய்திகள் வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.40 லட்சம் பறிமுதல்!…

வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.40 லட்சம் பறிமுதல்!…

வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.40 லட்சம் பறிமுதல்!… post thumbnail image
சென்னை:-பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் வேகமாக வந்த 2 கார்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தில் ரூ.22 லட்சத்து 7 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

ஆனால் அந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில், அந்த வழியாக காரில் வந்த ஒரு பெண்ணின் கைப்பையில் ரூ.3 லட்சத்து 99 ஆயிரம் இருந்தது. எவ்வித ஆவணங்களும் அந்த பெண்ணிடம் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சூரக்காடு பகுதியில் நடந்த சோதனையில், சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ஒரு காரில் எந்தவித ஆவணமும் இல்லாமல் கொண்டு வரப்பட்ட, ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் ஆயிரத்து 50 சிங்கப்பூர் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப்போல கோவை-தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி முன்பு ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. இந்த பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்டம் காட்டூர் போலீசார் காந்திபுரம் பஸ்நிலையத்தில் பையுடன் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை-தடாகம் ரோட்டில் வந்த மற்றொரு காரில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.கோவை, சிங்காநல்லூர் அருகே நடந்த வாகன தணிக்கையில் ஒரு காரில் இருந்த ஏராளமான தங்க நாணயங்களும், ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழிச்சாலையில் வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த காரில் சூட்கேஸ்கள் மற்றும் பைகளில் சுமார் ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 800 மதிப்பிலான கவரிங் நகைகள் இருந்தன. அந்த நகைகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை-நீடாமங்கலம் சாலையில் நேற்று அதிகாலை வந்த ஒரு காரில், உரிய ஆவணங்கள் இன்றி பட்டுப்புடவைகள் உள்பட மொத்தம் 73 புடவைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும்.அந்த புடவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் – சேலம் ரோடு முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மடக்கப்பட்ட ஒரு காரில் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சுமார் 61½ கிலோ வெள்ளி கொலுசுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் ஒரு காரில் இருந்த 500 லுங்கிகளும் கைப்பற்றப்பட்டன. தர்மபுரி மாவட்டம் அரூர்-சேலம் சாலையில் பிடிபட்ட காரில் இருந்து ரூ.1 லட்சமும், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரேகடஅள்ளி பகுதியில் சோதனையிடப்பட்ட காரில் ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.40 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி