செய்திகள்,திரையுலகம் என்றென்றும் (2014) திரை விமர்சனம்…

என்றென்றும் (2014) திரை விமர்சனம்…

என்றென்றும் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகி பிரியங்கா ரெட்டி சென்னையில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். அங்கு இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார். அதே பள்ளியில் பி.டி. மாஸ்டராக பணிபுரிபவர் இவருக்கு போதை மருந்து சப்ளை செய்கிறார் .

ஒருநாள் பி.டி. மாஸ்டரும், அந்த ஆசிரியையும் சேர்ந்து போதை மருந்தை உட்கொண்டு உச்சத்தில் இருக்கும்போது, பிடி மாஸ்டர் அந்த ஆசிரியையிடம் தவறாக நடக்க முயல்கிறார். அதை விரும்பாத அந்த ஆசிரியை அவரிடமிருந்து தப்பிக்க முயல்கிறாள். அப்போது அங்கு வரும் நாயகி அவர்களை பார்த்துவிடுகிறாள். நாயகி பார்த்ததை அறிந்த பிடி மாஸ்டர் அவளை பிடிக்க முயலும்போது அவரிடமிருந்து தப்பிச்செல்லும் நாயகி காரில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறாள்.
இந்த நிலையில் தன்மீது பாசமாக இருந்த தாய் இறந்துவிட்டதால், தன்னுடைய காதலியான நாயகியை தேடி சென்னைக்கு வருகிறார் நாயகன் சதீஷ். வந்த இடத்தில் கோமா நிலையில் நாயகி இருப்பதை அறிந்து அவளின் இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை அறிய முற்படுகிறான். இறுதியில், நாயகியின் நிலைக்கு காரணமானவனை கண்டுபிடித்து பழி வாங்கினாரா? நாயகியுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

பல முன்னணி நடிகர்களுடன் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சதீஷ் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது இப்படம். இப்படத்தில் இவர் எதையோ தொலைத்துவிட்டு தேடுபவர் போல நடித்திருக்கிறார். அவரைப் போலவே நாமும் அவரிடமிருந்து நடிப்பை தேட வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் காதலுக்கும், சோகத்திற்கும் தேவையான முகபாவனைகளைகூட அவரிடம் காணமுடியவில்லை.
நாயகி பிரியங்கா ரெட்டி அழகாக இருக்கிறார். இந்த படத்தில் ஜோதிகா, திரிஷாபோல் இவருக்கென்று தனியாக ஒரு பாடல் வேறு. படத்தில் ரொம்பவும் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார். பிடி மாஸ்டராக வரும் தீனா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தீப்பெட்டி கணேசன், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஒரு சில காட்சிகள் வந்துபோனாலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் காதலை வலுவாக சொல்ல நினைத்திருக்கும் இயக்குனர் சினிஷ், அதற்குரிய காட்சிகளை வலுவாக வைக்க தவறியிருக்கிறார். செஸ் போர்டு, சமையலறை ஆகியவற்றையே காதலிக்கும் களங்களாக காட்டியிருப்பது அபத்தமானது. நிறைய காட்சிகள் ரொம்பவும் மௌனமாக செல்கிறது. கதைக்கு தேவையில்லாத காட்சிகளை படத்தின் நீளத்திற்காக வலுக்கட்டாயமாக புகுத்தி போரடிக்க வைத்திருக்கிறார்.சரவணன் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுக்கிறது. ஒளியமைப்பும், பாடல்களில் தெளிவான காட்சியமைப்பும் அழகாக இருக்கிறது. தரண் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் மெருகூட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘என்றென்றும்’ தெளிவில்லை….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி