அரசியல்,செய்திகள் வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…

வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…

வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதற்கு அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இந்நிலையில், அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து, புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகளுக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளது.

அதற்கு 14 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தையோ, யோசனையையோ தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி கருத்து தெரிவிக்காதபட்சத்தில், அரசியல் கட்சிகளுக்கு கருத்து இல்லை என்று யூகித்து, இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளே முறைப்படி அமல்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:-தேர்தல் செலவுக்காக, வேட்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க விரும்பும் அரசியல் கட்சிகள், அத்தொகையை ரொக்கமாக தரக்கூடாது. குறுக்கு கோடிட்ட காசோலை மூலமாகவோ, வரைவோலை மூலமாகவோ, வங்கிகணக்கு பரிவர்த்தனை மூலமாகவோ அளிக்க வேண்டும். அதிலும், அத்தொகை வேட்பாளர் செலவு உச்சவரம்புக்குள் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஆண்டுதோறும் அக்டோபர் 30-ந் தேதிக்குள் தங்களது ஆண்டு கணக்கு விவரங்களின் தணிக்கை அறிக்கையை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். கட்சியின் பொருளாளரோ அல்லது வேறு நிர்வாகியோ, மாநிலம், உள்ளூர் அளவில் கட்சியின் கணக்கை பராமரிப்பதுடன், கட்சியின் தலைமையகத்திலும் ஒட்டுமொத்த கணக்கை பராமரித்து வர வேண்டும்.வேட்பாளர்களைத் தவிர, மற்றவர்களுக்கு கொடுக்கும் பணத்தில், ஒரே நாளில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல், தனிநபருக்கோ, கம்பெனிக்கோ ரொக்கமாக அளிக்கக்கூடாது. வங்கி வசதி இல்லாத கிராமங்களுக்கும், கட்சி ஊழியருக்கு சம்பளமாக கொடுக்கும் பணத்துக்கும் விதிவிலக்கு அளிக்கப்படும். ரூ.1,000-க்கு மேல் பெறப்படும் நன்கொடைகளுக்கு ரசீது அளிக்கப்பட வேண்டும்.

நன்கொடை அளித்தவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களை பராமரித்து வர வேண்டும். ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடையை ரொக்கமாக பெறக்கூடாது. காசோலை, வரைவோலை மற்றும் வங்கி கணக்கு பரிவர்த்தனை மூலமாகவே பெறவேண்டும்.இப்படி பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் 7 நாட்களுக்குள் கட்சியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும். நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி