அரசியல்,செய்திகள் நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை…

நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை…

நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை… post thumbnail image
புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 18–ந்தேதி தீர்ப்பு கூறியது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த தமிழக மந்திரிசபை கூட்டத்தில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளனுடன் ஏற்கனவே 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் என 7 பேரையும் விடு தலை செய்யும் முடிவு எடுத்தது.இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதி 3 நாளில் கருத்து தெரிவிக்குமாறு கேட்டு இருந்தது. இதை ஏற்க மறுத்த மத்திய அரசு 7 பேர் விடுதலையை நிறுத்தி வைக்குமாறு பதில் கடிதம் எழுதியது.மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. அதில் எந்த அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று விளக்கம் கேட்டு இருந்தது. தமிழக அரசு உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கூறி இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து, இதில் சட்ட சிக்கல்கள் பற்றி ஆராய வேண்டி உள்ளது. எனவே 3 பேரின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு இடைக்கால தடை விதித்தது.வழக்கு விசாரணை மார்ச் 6–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதற்குள் மத்திய– மாநில அரசுகள், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு ரிட் மனு தாக்கல் செய்தது. அதில் நளினி, ஜெயக்குமார், ரவிச் சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரின் விடுதலைக்கும் தடை விதிக்குமாறு கூறியிருந்தது.
இந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 27–ந்தேதி (இன்று) மனு மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி இன்று தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் மனு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘‘7 பேர் விடுதலையில் தமிழக அரசு மத்திய அரசின் கருத்தை கேட்டு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் மத்திய அரசு பதில் அளிக்கும் முன்பே கோர்ட்டுக்கு சென்று மனுதாக்கல் செய்தது ஏன்? எதற்காக இவ்வாறு அவசரம் காட்டுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 432–ன்படி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதாடினார்.மத்திய அரசு வக்கீல் வாதாடும்போது, ‘‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான ஆயுத தடைச்சட்டம், வெடிபொருள் தடைச்சட்டம் போன்றவை மத்திய அரசின் வரம்புக்கு கீழ் வருகிறது’’ என்றார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி சதாசிவம், ‘‘ஒரு வாரத்தில் இதுபற்றி கோர்ட்டு முடிவு செய்யும். சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிடுவது 7 பேரின் விடுதலையை நிறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. இதில் சரியான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆராயப்பட வேண்டும், ஒவ்வொரு மாநிலமும் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 6–ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள் அதுவரை நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடைவிதித்தனர்.ஏற்கனவே 3 பேர் விடுதலையை எதிர்க்கும் மனு விசாரணையும் மார்ச் 6–ந்தேதி நடைபெறுகிறது. அதே நாளில் 4 பேர் விடுதலையை எதிர்க்கும் மனு விசாரணையும் நடைபெறுகிறது. எனவே 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா? என்பது 6–ந்தேதி தெரிய வரும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி