அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் பிடிகொடுக்காமல் இருக்கிறார்: திருச்சியில் கருணாநிதி பேட்டி…

விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் பிடிகொடுக்காமல் இருக்கிறார்: திருச்சியில் கருணாநிதி பேட்டி…

விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் பிடிகொடுக்காமல் இருக்கிறார்: திருச்சியில் கருணாநிதி பேட்டி… post thumbnail image
திருச்சி:-திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் தி.மு.க.வின் 10–வது மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கே தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று சென்னையில் இருந்து காரில் திருச்சி சென்றார்.இரவு சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை மாநாடு நடைபெறும் திடலுக்கு வந்தார். அங்கு மாநாட்டு பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:–

கே: திருச்சி மாநாடு 2 நாட்கள் என்று கூறப்பட்டது. இப்போது 3 நாட்கள் மாநாடு போல் மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது. பிரமாண்டத்தை பார்க்கும்போது பாராளுமன்ற தேர்தல் வெறடிறிக்கு அறிகுறியாக இதனை எடுத்துக்கொள்ளலாமா?

ப: உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கும் ஆரம்ப அறிகுறியாக இது அமையும்.

கே: கூடா நட்பு கூடி வருமா?

ப: கூடாது.

கே: தி.மு.க.வுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகிறார்களே? கூட்டணிக்காகவா?

ப: என்னுடைய நண்பர்கள் என்ற முறையில் சந்திக்க வருகிறார்கள். இதில் அரசியல் இல்லை.

கே: கனிமொழி சோனியா காந்தியை சந்தித்தது ஏன்?

ப: திடீரென கனிமொழி எம்.பி. உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதுபற்றி அறிந்துகொள்ள சோனியா விரும்பி உள்ளார். அதன்படி மாநிலங்களவை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோது சோனியாகாந்தியை சந்தித்து பேசியுள்ளார். இதிலும் அரசியல் இல்லை. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

கே: 2 ஜி ஸ்பெக்டரம் வழக்கை காரணம் காட்டி தி.மு.க. காங்கிரஸ் மிரட்டுகிறது என்று கூறப்படுகிறதே?

ப: பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை படித்துவிட்டு மக்கள் அது போன்று நினைக்கிறார்கள். அதுபோன்று எதுவும் இல்லை.

கே: தி.மு.க. நிதிநிலை சரியில்லை என்று கூறினீர்கள். இப்போது மாநாடு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது சரியாகி விட்டதா?

ப: நிதிநிலை பெருகி வருகிறது. ஆனால் முற்றுப்புள்ளி அல்ல.

கே: கருத்துக்கணிப்பில் பா.ஜனதா அதிக இடங்களை பெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ளதே?

ப: காட்சிகள் மாறுவதற்கும், அணிகள் மாறுவதற்கும் அதன் காரணமாக ஆட்சி மாறுவதற்கும் மக்களின் எண்ணம் மாறும் என்பதை மறுப்பதற்கில்லை. திட்ட வட்டமாக எந்த கட்சி இந்தியாவில் ஆட்சி பொறுப்பு என்று சொல்ல முடியாது, சொல்லவும் விரும்பவில்லை.

கே: தி.மு.க. மீது ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு தெரிந்தோ, தெரியாமலோ உள்ளது. அதனை தேர்தலில் எப்படி முறியடிக்க போகிறீர்கள்?

ப: அது ராசா மீதோ, யார் மீதோ கூறப்பட்டிருந்தாலும் பத்திரிகைகளில் அது கொட்டை எழுத்துக்களில் கூறியிருந்தார்கள். 70 ஆயிரம் கோடி, 80 ஆயிரம் கோடி என்று கூறினார்கள். அது இப்போது வெடித்த பலூனை போல சுருங்கி கேள்விக்குறியாகி விட்டது.

கே: 2011–ல் 14 சதவீதமாக இருந்த தமிழகத்தின் வளர்ச்சி தற்போது 4½ சதவீதமாக குறைந்துவிட்டதே?

ப: 2014–ல் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி விகிதம் கவலைக் கிடமான முறையில் உள்ளது என்பதை புள்ளி விபரம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

கே: தே.மு.தி.க.வை பல முறை அழைத்தும் விஜயகாந்த் பிடிகொடுக்காமல் உள்ளாரே?

ப: விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர். அவர் சண்டையின் போதே எதிரிகளுக்கு, நடிகர்களுக்கு எப்படி பிடி கொடுக்காமல் இருப்பாரோ அப்படி இப்போதும் பிடி கொடுக்காமல் உள்ளார். அவரும், அவரது கட்சியும் தி.மு.க. கூட்டணியிலேயே இருக்கவேண்டும் என்ற எனது விருப்பத்தை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளேன். தமிழக மக்களை இன உணர்வோடும், ஒற்றுமையோடும் வாழ வைக்க வேண்டும் என உணர்வுள்ளவர்கள் எங்கள் அணிக்கு ஆதரவு தருவார்கள். எனது நம்பிக்கைக்கு விஜயகாந்தும் விதிவிலக் கல்ல.

கே: தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீது பெங்களூரில் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. ஆனால் கம்யூனிஸ்டு கட்சிகள் அவரை பிரதமர் ஆவார் என்று கூறி வருகிறார்களே? இதை அடிமைத்தனமாக, சந்தர்ப்பவாதமாக எடுத்து கொள்ளலாமா?

ப: உங்கள் கேள்வியிலேயே கடைசியில் விடையும் உள்ளது.

கே: தேர்தல் பிரசாரத்தில் எதனை முன்னிறுத்துவீர்கள்?

ப: இந்திய நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும், மாவாத மற்ற தன்மையினைவும், ஊழலற்ற நிர்வாகத்தையும் மற்றவர்களை மதித்து நடத்துகிற அண்ணாவின் கொள்கையை மதித்து அமையும்.

கே: தி.மு.க. மாநாட்டில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா?

ப: இதற்கு மவுனமே பதில்.

கே: பாராளுமன்றத்தில் மிளகு பொடி தூவப்பட்டது குறித்து?

ப: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே பாராளுமன்றதை பாழ்படுத்துவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

கே: 3–வது அணியில் உள்ளவர்கள் பிரதமராக விரும்புகிறார்களே, நீங்கள் விரும்பவில்லையா?

ப: என்னுடைய உயரம் எனக்கு தெரியும்.

கே: 3–வது அணி என்பது காங்கிரசுக்கு ஆதரவான அணி என்று மோடி கூறுகிறாரே:

ப: இதற்கு கருத்து கூற விரும்பவில்லை.

கே: மெகா கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா?

ப: வாய்ப்பு வந்தால் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கே: கட்சியில் தண்டிக்கப்பட்டவர்கள் மன்னிக்கப்படுவார்களா?

ப: தண்டிக்கப்பட்டவர்கள் மன்னிக்கும்படி நடந்து கொண்டால் மன்னிக்கப்படுவார்கள்.

கே: தி.மு.க. மாநாட்டில் கலந்துகொள்ளும் உங்களது மனநிலை எப்படி உள்ளது?

ப: இதற்கு பதிலை மாநாட்டில் நிறைவுரையில் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி