ரெட்டை கதிர் திரை விமர்சனம்…

விளம்பரங்கள்

சக்தி மற்றும் சக்திவேல் இவர்கள் இருவரும் சிறுவயதில் அனாதையாக்கப்படுகிறார்கள். சக்தி வளர்ந்தவுடன் ஒரு தாதாவின் வளர்ப்பு தம்பியாக, கல்லூரியில் படித்துக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டு வருகிறார்.

சக்திவேல் ஆதரவற்றவராக பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற கனவில் ஒரு கல்லூரியில் சேர்கிறார். அங்கு விடுதியில் தங்கும் இவரை கண்டு சக மாணவர்கள் இவருடைய தோற்றத்தைப் பார்த்து கேலி-கிண்டல் செய்கிறார்கள்.

ஒருநாள் ஒரு ரவுடி கும்பல் சக்திவேலிடம் வம்பிழுத்து அவரை அடித்து விடுகிறார்கள். அவர் வழியில் செல்லும்போது மயங்கி விழுகிறார். அந்த வழியாக வரும் அதே கல்லூரியில் படிக்கும் நாயகி அபிராமி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுகிறார். இதனால் அபிராமி மீது காதல் வயப்படுகிறார்.

இதற்கிடையில் வேறொரு கல்லூரியில் படிக்கும் சக்தி, தன் அண்ணனின் கட்டளையால் ஒரு கல்லூரியை அழிக்க, அந்த கல்லூரிக்கு மாற்றலாகி போகிறார். அங்கு கலவரத்தை உண்டு பண்ண அண்ணன் கட்டளையிடுகிறார்.

அந்த கல்லூரியில் தான் சக்திவேல் மற்றும் அபிராமி படிக்கிறார்கள். இதே கல்லூரியில் வந்து சேருகிறார் சக்தி. ஒருநாள் கெமிஸ்ட்ரி லேப்பில் ஒரு விபத்து ஏற்படுத்த திட்டம் தீட்டுகிறார் சக்தி. அந்த விபத்தில் ஒரு ஆசிரியருக்கு அடிப்பட்டு விடுகிறது. இதற்கு நிர்வாகம்தான் காரணம் என்று சக்தி, மாணவர்களை திரட்டி போராட்டம் பண்ணுகிறார். இந்த முயற்சி தோல்வி அடைகிறது. இதனை பார்க்கும் அபிராமி சக்தி மீது காதல் வயப்படுகிறார்.

இறுதியில் சக்தி அந்த கல்லூரியில் கலவரத்தை ஏற்படுத்தினாரா? சக்திவேல், அபிராமியை காதலிக்க வைத்தாரா? அபிராமி சக்தியை காதலிக்க வைத்தாரா? என்பதே மீதிக்கதை.

சக்தியாக நடித்திருக்கும் சுப்பு, சண்டை, நடனம், கோபம் என நடிப்புத்திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். சக்திவேலாக நடித்திருக்கும் துரை, பாவப்பட்டவர் போல் இருக்கிறார். அதனால்தான் என்னவோ படம் முழுக்க அப்படியே வருகிறார். அவரை சரியாக பயன்படுத்தியிருக்கலாம். அபிராமியாக நடித்திருக்கும் ஸ்மிதா, நடிக்க வாய்ப்பு குறைவு. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை.

சந்தர்ப்ப சூழ்நிலையில் அனாதையாக மாறும் குழந்தைகள், காலப்போக்கில் எப்படி மாறுகிறார்கள் என்ற கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர், புதுமுகங்களை வைத்துக்கொண்டு அவர்களிடம் வேலை வாங்க தெரியாமல் கோட்டை விட்டுவிட்டார். முதற்பாதியில் நீண்ட காட்சிகள், தேவையில்லாத காட்சிகள் என படத்திற்கு பொருந்தாமல் உள்ளது. சொல்ல வருவதை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம்.

தேவா குமார் இசையில் பாடல்களை ரசிக்கலாம். கானாபாலா குரலுக்கு பாண்டியராஜன் நடனம் ஆடும் பாடல் தாளம் போட வைக்கிறது. வாசுதேவன் ஒளிப்பதிவில் ஓரிரு காட்சிகளை ரசிக்கலாம்.

மொத்தத்தில் ‘ரெட்டை கதிர்’ கவரவில்லை….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: