செய்திகள்,விளையாட்டு 7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது…

7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது…

7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது… post thumbnail image
பெங்களூர்:-இந்திய பாராளுமன்றத்திற்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஐ.பி.எல். போட்டி தள்ளிப்போகலாம் அல்லது தேர்தலுக்கு முன்னரே நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.பி.எல். நிர்வாகம், ஐ.பி.எல். சீசன்-7 குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் என்றும் தேர்தலுக்காக தேதி மாற்றப்படாது என்றும் கூறியது. ஆனால், இந்தியாவை வெளியில் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெற்றது. அதன்பின் ஐ.பி.எல். சேர்மன் பிஸ்வால் கூறியதாவது:-ஐ.பி.எல். சீசன்-7 போட்டிக் குறித்து கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினோம். இறுதியில் ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி ஜுன் 3-ந்தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். போட்டியை இந்தியாவில் நடத்துவதா அல்லது தென் ஆப்பிரிக்காவில் நடத்துவதா என்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேசிய பின் அறிவிப்போம்.

நாங்கள் பெரும்பாலான போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புகிறோம். பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில் எங்களுக்கு சாதகமாக இருந்தால் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவோம். பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவில் நடத்த சம்மதம் தெரிவிக்கவில்லையென்றால் எங்களது அடுத்த திட்டம் தென் ஆப்பிரிக்காதான்.மேலும் இரண்டு இடங்களை தேர்வு செய்துள்ளோம். அதை இப்போது தெரிவிக்க இயலாது. மத்திய அமைச்சகத்தின் பதிலுக்குப்பின் போட்டிக்கான இடம், அட்டவணை அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு முன் 2009-ம் ஆண்டு இந்திய தேர்தல் நடந்தபோது, ஐ.பி.எல். சீசன்-2 தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி