அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 40 தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் 9-ந்தேதி தொடக்கம் – விஜயகாந்த் அறிவிப்பு…

40 தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் 9-ந்தேதி தொடக்கம் – விஜயகாந்த் அறிவிப்பு…

40 தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் 9-ந்தேதி தொடக்கம் – விஜயகாந்த் அறிவிப்பு… post thumbnail image
சென்னை:-பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி கொண்டு வருவதோடு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 10.3 சதவீதம் வாக்குகளை பெற்றது. அந்த கட்சியை தங்களது கூட்டணியில் இழுக்க தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில் பிப்ரவரி 2-ந்தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் அந்த கூட்டத்தில் தொண்டர்களிடம் கூட்டணி குறித்து கேட்டபோது, கூட்டணி வேண்டாம் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விஜயகாந்த், தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க., தரப்பில் தே.மு.தி.க.வை தொடர்பு கொண்டு கூட்டணிக்கு அழைப்பு விடுத்துவந்த நேரத்தில், நேற்று திடீரென 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் பிப்ரவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை நடைபெறும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தே.மு.தி.க. சார்பில் வருகின்ற 2014 பாராளுமன்ற தேர்தலுக்காக தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் பிப்ரவரி 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை காலை 10 மணியளவில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக்கழகத்தில், தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற இருக்கின்றது.எனவே விருப்பமனு கொடுத்துள்ளவர்கள் தங்கள் தொகுதிக்கான தேதியில் நேரில் வரவேண்டும். வரும்போது கழக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ், தனித்தொகுதிக்கு சாதி சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), சிதம்பரம் (தனி), கடலூர், விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 9-ந்தேதி நடைபெறும்.

அதே போல், நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ந்தேதியும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி (தனி), தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய தொகுதிகளுக்கு பிப்ரவரி 11-ந்தேதியும் நடைபெறும்.இதேபோல், வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது. அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிடும் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி