அரசியல்,செய்திகள்,விளையாட்டு சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு… post thumbnail image
புதுடில்லி:-இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு வீரர்களும் இவ்விருதை பெறும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு, 2011 டிசம்பர் மாதம் முன்வந்தது.

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன், ஓய்வு பெற்றார் (நவ., 16) சச்சின். அன்றைய தினம் மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்படும் என அறிவித்தது.ஏற்கனவே, இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் அசத்திய மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்திற்கு, ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.இந்நிலையில், சச்சினுக்கு இவ்விருது வழங்கப்பட்ட நடைமுறைகள் குறித்து தெரிவிக்குமாறு, விளையாட்டு ஆர்வலர் ஹேமந்த் துபே என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) மூலம், கடந்த 2013, நவ., 27ல் விண்ணப்பித்தார்.இதற்கு அரசு அனுப்பிய பதில் குறித்த விவரம்:

சச்சின் குறித்த விவரங்களை அனுப்புமாறு, கடந்த 2013, நவ., 14, மதியம்1.35 மணிக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகம் ‘பேக்ஸ்’ அனுப்பியது. மாலை 5.22 மணிக்கு சச்சினின் விவரங்களை பெற்றது பிரதமர் அலுவலகம். பின், இது விளையாட்டுத் துறை செயலரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மறுநாள்(நவ.,15) பிரதமர் மன்மோகன் சிங், தனது தரப்பு வேலைகளை முடித்து, சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ தருவது குறித்த செயல் திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பினார்.(சுமார் 24 மணி நேரத்தில் நடைமுறைகள் முடிந்தன).
பின், நவ., 16ல் விருது குறித்து அறிவிப்பு வெளியானது. நவ., 17ல் பிரதமர் மன்மோகன் சிங், சச்சினுக்கு கடிதம் மூலம் இதை தெரியப்படுத்தினார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,‘ ஆர்.டி.ஐ., சட்டத்தின் படி விண்ணப்பித்தாலும், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இடையிலான தகவல் பரிமாற்றம் குறித்து, விதி 74(2)ன் படி, தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், சச்சினுக்கு விருது தரப்பட்டது குறித்த 14 பக்க விவரங்கள் மட்டும் மனுதாரருக்கு வழங்கினோம்,’ என, தெரிவித்துள்ளது.

டில்லியில் இன்று நடக்கும் விழாவில் சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுகிறது. இவ்விருதை குறைந்த வயதில் பெறுபவர் மற்றும் முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி