அரசியல்,செய்திகள் ‘கூகுள்’மூலம் தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்…

‘கூகுள்’மூலம் தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்…

‘கூகுள்’மூலம் தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்… post thumbnail image
புதுடெல்லி:-இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக ‘கூகுள்‘, ‘யாஹூ‘ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் ‘கூகுள்’ தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர்.

அவ்வகையில், உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான ‘சர்ச் என்ஜின்’களில் ஜாம்பவானாக ‘கூகுள்‘ திகழ்ந்து வருகிறது.இதற்கிடையில், இணையதள பயன்பாட்டாளர்களில் யார், யார், எந்தெந்த இணையத்தின் பெயரை அதிகமாக தேடி பயனடைந்துள்ளனர் என்ற நுழைவு கணக்குகளை ‘பெட்டா‘ என்ற நிறுவனம் தினந்தோறும் பதிவு செய்து வருகிறது.

இவ்வகையில், உலகின் அதிக மக்கள் தேடிய பெயராக ‘கூகுள்’ தேடு இயந்திரமும், இரண்டாவது இடத்தை பிரபல மனிதர்கள், பொருட்கள், சம்பவங்களை சிறுகுறிப்பாக இணையத்தில் பதிவு செய்து வைத்துள்ள ‘விக்கிபீடியா‘வும் பெட்டா’வில் இடம் பிடித்துள்ளது.இதன் அடிப்படையில், உலகின் பிரபல மனிதர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்களில் அதிகமாக தேடப்பட்ட பெயர்களையும் ‘பெட்டா’ பதிவு செய்து வருகிறது. இந்த பதிவுகளின் சமீபத்திய தொகுப்பின்படி, உலகம் முழுவதிலும் இருந்து அதிகமாக தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் பட்டியலில் குஜராத் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் பெயர் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மூன்றாவது இடத்தை காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, நான்காவது இடத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பெற்றுள்ளனர்.இந்த பட்டியலில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆறாவது இடத்திலும், உத்தரபிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் ஏழாவது இடத்திலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் எட்டாவது இடத்திலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் ஒன்பதாவது இடத்திலும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த வரிசையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அடுத்த ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி