40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆக பாடுபடுவோம்-ஓ.பன்னீர்செல்வம் பேச்சு…

விளம்பரங்கள்

சென்னை:-தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்றிரவு நடந்தது.கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலை ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினர்.

அ.தி.மு.க. பொருளாளரும், நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:–
“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 3 முறை தமிழக முதல்– அமைச்சராக இருந்தார். புரட்சித்தலைவியும் 3 முறை முதல் அமைச்சராகி நல்லாட்சி வழங்கி வருகிறார். 24 ஆண்டுகள் ஆட்சி செய்யும் உரிமை பெற்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா மக்களுக்காக தொடர்ந்து நல்லாட்சி புரிகிறார்.பல்வேறு சோதனைகளை சந்தித்து, கருணாநிதியின் சதி செயல்களை முறியடித்து மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அம்மா செயல்படுத்தி வருவதை நாடே பாராட்டுகிறது.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் லட்சியங்களை கடுகளவும் பிசகாமல் நிறைவேற்றி வருகிறார்.1½ கோடி தொண்டர்கள் கொண்ட இரும்பு கோட்டையாக அ.தி.மு.க.வை புரட்சித் தலைவி அம்மா ஆக்கி உள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 98 சதவீத வெற்றி பெற்றது. நம் கட்சியை சேர்ந்த பலரை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி, ஊராட்சி தலைவர்களாக்கி புரட்சித்தலைவி அழகு பார்த்துள்ளார்.பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய 3 தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய 3 பண்புகளை ஒருங்கே பெற்றவர் புரட்சித் தலைவி.அவரது நல்லாட்சி செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களை நாம் அனைவரும் வீடு வீடாக மக்களை சந்தித்து எடுத்து சொல்ல வேண்டும்.

மத்திய ஆட்சியில் தி.மு.க. 17 வருடம் பங்கு பெற்று அதிகாரத்தில் இருந்தது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. ஆனால் வளம் கொழிக்கும் இலாகாவை மட்டும் கருணாநிதி கேட்டு பெற்றுக்கொண்டார்.காவிரி பிரச்சினை, கச்சத்தீவு, இலங்கை பிரச்சினையில் கருணாநிதி செய்தது துரோகம்தான்.இந்தியாவை ஆட்சி செய்ய ஒரு வல்லமை படைத்த பிரதமர் கடந்த 20 ஆண்டாக கிடைக்கவில்லை. இதில் மிகப்பெரிய இடைவெளி விழுந்து விட்டது. இதை புரட்சித்தலைவியால்தான் நிரப்ப முடியும்.

உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளை சமாளிக்க ஒரு பலம் பெற்ற பிரதமர் நாட்டுக்கு தேவை. இந்தியாவுக்கு விடிவு காலம் வர புரட்சித்தலைவி அம்மா பிரதமர் ஆனால்தான் முடியும்.இப்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் வருகிறது. அம்மா பிரதமர் ஆக வேண்டும். எனவே அவர் நிறுத்துகிற 40 வேட்பாளர்களையும் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.அந்த வெற்றியோடு புரட்சித்தலைவி டெல்லி செல்வார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பி வரும்போது பிரதமர் ஆக திரும்பி வருவார். அடுத்த எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அம்மாவை பிரதமராக காண்போம். அதற்காக ஓய்வின்றி பாடுபடுவோம்”.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் சுந்தரபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஏழுமலை, வி.கே.பாபு, நுங்கை மாறன், 114–வது வட்ட செயலாளர் கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், வீடியோ சரவணன், தி.நகர் சத்யா, யு.கற்பகம், ஆர்.சி.ஆறுமுகம், கருணாகரன், பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: