அரசியல்,செய்திகள் ராஜ்யசபா எம்.பி. ஆகும் தோனி?…

ராஜ்யசபா எம்.பி. ஆகும் தோனி?…

ராஜ்யசபா எம்.பி. ஆகும் தோனி?… post thumbnail image
ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், மகேந்திர சிங் தோனியை, ராஜ்சபா, எம்.பி., ஆக ஆக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதற்காக, ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான, லோக்ஜன சக்தி உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி ஆதரவை கோரியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், உலக கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவானாகவும் விளங்கிய, சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில், காங்., கட்சியின் சார்பில், ராஜ்யசபா எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சச்சினின் சாதனைகளை பாராட்டும் வகையில், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், சச்சினை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியையும் அரசியலில் இழுக்கும் பணிகள், தீவிரம் அடைந்துள்ளன.

உலக அரங்கில், தோனியின் செயல்பாடுகள், ஏராளமான மக்களை கவர்ந்து உள்ளதாலும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களிலேயே, இந்தியாவிற்கு அதிக வெற்றிகளை பெற்றுத் தந்தவர் என்பதாலும், தோனி, இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவராக திகழ்கிறார். இவரை ராஜ்யசபா எம்.பி., ஆக்கி விடுவதின் மூலம், லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, அவரை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி திட்டமிட்டு உள்ளது.அடுத்த மாதம் நடைபெறஉள்ள, ராஜ்யசாபா எம்.பி.,க்கான தேர்தலில், ஜார்கண்டில் உள்ள இரு இடங்களில் ஒன்றை, தோனிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, லோக்ஜன சக்தி உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தோனியை எம்.பி.,யாக்குவதின் மூலம், ஜார்கண்ட் பெருமை அடையும் எனவும் கூறியுள்ளனர். மாநிலப் பெருமைக்காக, தோனியை எம்.பி.,யாக்குவதாகக் கூறினாலும், அரசியல் சுய லாபத்திற்காகவே, தோனியை அரசியலுக்கு இழுப்பதாக, பலரும் கருத்து தெரிவித்துஉள்ளனர்.ஏற்கனவே, தோனியின் சகோதரர், நரேந்தி சிங் தோனி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ள நிலையில், லோக்ஜன சக்தியின் இந்த முயற்சி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி