செய்திகள்,விளையாட்டு கோஹ்லியின் சாதனையும்,இந்தியாவின் வேதனையும்…

கோஹ்லியின் சாதனையும்,இந்தியாவின் வேதனையும்…

கோஹ்லியின் சாதனையும்,இந்தியாவின் வேதனையும்… post thumbnail image
நேப்பியர்:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (8), ஜெசி ரைடர் (18) ஏமாற்றினர். பின் இணைந்த வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்திய பந்துவீச்சை சுலபமாக சமாளித்த இவர்கள், விரைவாக ரன் சேர்த்தனர். 3வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த போது வில்லியம்சன் (71) அவுட்டானார். தொடர்ந்து டெய்லரும் (55) வெளியேறினார்.பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் (30) ஓரளவு கைகொடுத்தார். ரோஞ்சி (30), நாதன் மெக்கலம் (2) நிலைக்கவில்லை. சமீபத்தில் அதிவேக சதம் அடித்து புதிய ‘ஹீரோவாக’ அவதாரம் எடுத்த கோரி ஆண்டர்சன், மீண்டும் மிரட்டினார். இவரது அதிரடி அரைசதம் கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது. கோரி ஆண்டர்சன் (68), சவுத்தி (3) அவுட்டாகாமல் இருந்தனர்.இந்தியா சார்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (3), ஷிகர் தவான் (32) ஜோடி சொதப்பல் துவக்கம் தந்தது. ரகானே (7), ரெய்னாவும் (18) ஏமாற்றினர். பின் விராத் கோஹ்லி, கேப்டன் தோனி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவுத்தி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 18வது சதத்தை எட்ட, ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்தது. இந்திய அணி 42 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இந்த நேரத்தில் 42வது ஓவரை வீசிய மிட்சல் மெக்லீனகன், நமக்கு ‘வில்லனாக’ மாறினார். இவர் ‘பவுன்சராக’ வீசிய ௩வது பந்தில் தோனி (40), அவுட்டானார். ௬வது பந்தில் பொறுப்பற்ற ‘ஷாட்’ அடித்த ரவிந்திர ஜடேஜா ‘டக்’ அவுட்டானார். பின் மீண்டும் பந்துவீச வந்த மெக்லீனகன் இம்முறை விராத் கோஹ்லியை(123) வெளியேற்றி, இந்திய அணியின் கதையை கச்சிதமாக முடித்தார். புவனேஷ்வர் (6), அஷ்வின் (12), இஷாந்த் (5) உள்ளிட்ட ‘டெயிலெண்டர்கள்’ ஏமாற்ற, இந்திய அணி 48.4 ஓவரில் 268 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’ தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி 1–0 என முன்னிலை பெற்றது.
ஆட்டநாயகன் விருதை கோரி ஆண்டர்சன் தட்டிச்சென்றார்.இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் வரும் 22ம் தேதி நடக்கிறது.

ஸ்டார் ‘இந்தியா:-
இந்திய அணியின் நீண்டநாள் ‘ஸ்பான்சர்’ சகாரா சமீபத்தில் விலகியது. இதையடுத்து இந்த உரிமத்தை ஸ்டார் நிறுவனம் பெற்றது. நேற்றைய போட்டியில் முதல் முறையாக இந்திய அணி வீரர்கள் ‘ஸ்டார்’ பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து களமிறங்கினர்.

டெய்லர் 4000:-
நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் நேற்று 15 ரன்கள், எடுத்த போது ஒருநாள் அரங்கில் 4000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 9வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார்.

4 ஆண்டுகளுக்கு பின்:-
நேற்று 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக கடைசியாக நடந்த 7 ஒருநாள் போட்டிகளில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2010ல் தம்புலாவில் நடந்த ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அதிவேக 18:-
நியூசிலாந்துக்கு எதிராக தனது 119வது இன்னிங்சில் 123 ரன்கள் விளாசிய விராத் கோஹ்லி, குறைந்த இன்னிங்சில் 18 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியை (174 இன்னிங்ஸ்) முந்தி முதலிடம் பிடித்தார்.

மாறியது வரலாறு:-
இந்தியா ‘சேஸ்’ செய்யும் போது, விராத் கோஹ்லி, சதம் அடித்தால் வெற்றி வசப்படும். இந்த வரலாறு நேற்று மாறியது. இவர், ‘சேஸ்’ செய்த வகையில் தனது 12வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் முதல் முறையாக இந்திய அணி தோற்றது. எஞ்சிய 11 முறை வெற்றி பெற்றது.

ஷமி 4:-
நேற்று 4 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி, ஒருநாள் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, ஷமி 42 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி