அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதம வேட்பாளராக நாளை ராகுல் காந்தி தேர்வு…

பிரதம வேட்பாளராக நாளை ராகுல் காந்தி தேர்வு…

பிரதம வேட்பாளராக நாளை ராகுல் காந்தி தேர்வு… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல்– மே மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை முன் நிறுத்தி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் தொடங்குகிறது.
2 நாட்கள் நடக்கும் கூட்டத்தில் காங்கிரசின் பிரசார வியூகம், தேர்தல் அறிக்கை மற்றும் கூட்டணி பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை ஏகமனதாக தேர்வு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. வெள்ளிக்கிழமை அந்த தீர்மானம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்படும். அதன்பிறகு ராகுல் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

இந்நிலையில் ராகுலை முன்னிலைப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான போஸ்டர்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இது வரும் தேர்தலில் காங்கிரசை வழிநடத்தப்போவது ராகுல் காந்திதான் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.இதற்கிடையே நேற்று இந்தி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தரும் எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என்று அறிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:–நாங்கள் ஜனநாயகக் கூட்டணியை அமைத்துள்ளோம். ஜனநாயகம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதியை தேர்வு செய்வதன் மூலம் பிரதமரை தேர்வு செய்கிறார்கள்.தேசிய நலன்கருதி, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் கட்சி எனக்கு அளிக்கும் எந்த பொறுப்பையும் கடமை உணர்வுடன் ஏற்க தயாராக உள்ளேன்.காங்கிரசில் உள்ள தலைவர்கள் சாதாரண மக்களுடன நெருக்கமாக உள்ளனர். எங்கள் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பக்கம் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன்.

அரசியலில் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடுத்த நாங்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எதிர்காலத்திலும் இந்த திட்டம் தொடரும்.எனது வாழ்க்கையில் நான் பொறுப்புகளில் இருந்து விலகிச் சென்றதில்லை. அதிகாரம் என்பது விஷம் மாதிரி ஆபத்துடன் வரும். அதை கையாள தெரிந்திருக்க வேண்டும். அதிகாரத்தை மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்த வேண்டும். சுயநலத்துக்காக அதை பயன்படுத்தக் கூடாது.நாம் எல்லாருமே பிரதமர் பதவி பற்றி மட்டுமே விவாதிப்பது ஏன் என்பதே எனது கேள்வி. இப்படி ஒரு குறிப்பிட்ட பதவி பற்றியும், ஒரு குறிப்பிட்ட மனிதர் பற்றியும் மட்டுமே நாம் ஏன் விவாதிக்க வேண்டும்.அரசியல் சீர்திருத்தம் பற்றி நாம் ஏன் பேசுவதே இல்லை. இந்த முறையை மாற்ற யாரும் தயாராக இல்லை. அரசியல் முறையில் நாம் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி தனிப்பட்ட ஒரு நபரை முன்னிலைப்படுத்தி நாட்டில் ஆட்சி அமைக்க விரும்புகிறது. இது நமது நாட்டுக்கு நல்லது அல்ல. தனிப்பட்ட ஒருவரை சுற்றி அரசு பணிகள் இருக்கக் கூடாது.ஒன்றுபட்ட அரசியல் மூலம் மட்டுமே நமது நாட்டின் 120 கோடி மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த நாட்டின் மூலக்கூறுகளில் காங்கிரஸ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்தநாட்டின் சமுதாய கட்டமைப்பை பாதுகாக்கும் அரசியல் சக்தியாக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது. இதை பா.ஜ.க. மறந்து விட்டது.ஆம் ஆத்மியின் கொள்கைகள் ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் நமது கொள்கை முடிவுகள் குறுகிய கால பார்வை கொண்டதாக இருக்கக் கூடாது. ஆம் ஆத்மி கட்சி டெல்லி மக்களை பாதுகாக்க தொலை நோக்கு திட்டங்களுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி