செய்திகள் சபரிமலையில் நாளை மகரஜோதி…

சபரிமலையில் நாளை மகரஜோதி…

சபரிமலையில் நாளை மகரஜோதி… post thumbnail image
சபரிமலை:-சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் சபரிமலையில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டபோது சாமி தரிசனம் செய்வதற்கான பக்தர்களின் வரிசை சரம்குத்தியை தாண்டி காணப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் பல குழுக்களாக பிரித்து மலையேற அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உருவானது.இந்த ஆண்டின் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னதாகவே வந்து ஆங்காங்கே முகாம் அமைத்து தங்கி உள்ளனர்.

மகரவிளக்கு விழாவையொட்டி, எரிமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று காலை சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) பம்பை விளக்கு மற்றும் பம்பை விருந்து வழிபாடுகள் நடக்கிறது.
வன விலங்குகள் நிறைந்த ஆபத்தான காட்டு வழிகளில் செல்லும் பக்தர்களை கண்காணிப்பதற்காக தனி போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.பரம்பரை பாதையான பெருவழியில் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக சபரிமலைக்கு நடந்து வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் காட்டு வழியில் நடந்து வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், வழக்கமாக வரும் வழியில் பக்தர்கள் வந்தால் அனைவருக்கும் சுகமான சாமி தரிசனம் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள் என்பதால், கூடுதல் பஸ் வசதியும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் 18-ந்தேதி காலை 10.30 மணி வரை சாமிக்கு நெய் அபிஷேகம் செய்யலாம். பின்னர் உச்ச பூஜைக்காக சாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும். 16 மற்றும் 17-ந்தேதிகளில் சிறப்பு வாய்ந்த படி பூஜை நடைபெறும். மகர பூஜையை போலவே 18 படிகளுக்கு நடத்தப்படும் படிபூஜையை பார்க்கவும் வழிபடவும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்.அதைத் தொடர்ந்து 19-ந்தேதி அலங்காரத்துடன் அய்யனை தரிசித்து செல்லலாம். அதன்பின் நெய் அபிஷேகம் நடைபெறாது. அய்யப்பன் கோவில் நடை 20-ந்தேதி ராஜகுடும்ப பிரதிநிதியின் சாமி தரிசனத்திற்கு பின் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 17-ந்தேதி வரை பூஜை நடக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி