புத்தாண்டில் உலக சாதனை படைத்த வீரர்…

விளம்பரங்கள்

நியூஸிலாந்து சென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது ஒருநாள் ஆட்டம்” குயின்ஸ்டவுன்” மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது.டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. நியூஸிலாந்தின் கப்டில் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து மெக்கல்லம், ரைடர் ஜோடி மேற்கிந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. ராம்பால் ஓவரில் மெக்கல்லம் 3 சிக்ஸர்களும், ஹோல்டர் ஓவரில் ரைடர் தன் பங்குக்கு 2 சிக்ஸர்களும் பறக்க விட, ஆட்டம் களை கட்டியது. ஆனால், சுனில் நரைன் பந்தில் சிக்ஸர் அடித்த கையோடு மெக்கல்லம் 33 ரன்களில் வெளியேறினார். ரோஸ் டெய்லர் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பின்னர் களமிறங்கிய ஆண்டர்சன், ரைடருடன் ஜோடி சேர்ந்து ரன் மழை பொழிந்தார். ஹோல்டர் வீசிய 12-வது ஓவரில் ஆண்டர்சன் தலா ஒரு பவுண்டரி , சிக்ஸர் விரட்ட, ரைடர் 2 பவுண்டரிகள் விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அடுத்த ஓவரில் ஆண்டர்சன் 4 சிக்ஸர்கள் பறக்கவிட, அந்த ஓவரை வீசிய சுனில் நரைன் வாயடைத்து நின்றார். ராம்பால் வீசிய 15-வது ஓவரில் மீண்டும் ஆண்டர்சன் 4 சிக்ஸர்கள் விளாசி வாணவேடிக்கை நிகழ்த்தினார். மறுமுனையில் ரைடர், எதிரணியினரின் பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். அதிரடியாக ஆடிய ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்தார்.
மறுமுனையில் ரைடர் 46 பந்துகளில் 100 ரன்களை (12 பவுண்டரி, 5 சிக்ஸர்) எட்டினார். நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. ஆண்டர்சன் 131 ரன்களுடனும் (47 பந்துகள்),(6 பவுண்டரி,14 சிக்ஸர்) லூக் ரோஞ்சி 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தன் சாதனை முறியடிக்கப்பட்டது பற்றி அப்ரிடியின் கருத்து:-

என் சாதனையை நியூஸிலாந்தின் “ஆண்டர்சன்” முறியடித்து விட்டார் என்பதுதான் புத்தாண்டில் கேட்ட முதல் தகவல். இதற்கு முன் அவரது பெயரைக் கேள்விப்பட்டது கூட இல்லை. 36 பந்துகளில் சதம் அடிப்பது என்பது மிகச்சிறந்த சாதனை. ஆண்டர்சன் அனைத்து பாராட்டுக்கும் தகுதியானவர்.

சாதனைகள் என்பவை முறியடிக்கப்படுபவைதான். இருபது ஓவர் ஆட்டம் கோலோச்சும் இந்தக் காலத்தில் என் சாதனை முறியடிக்கப்படும் என ஏற்கெனவே கணித்திருந்தேன். ஆனால், ஒரு புது வீரர் இதை முறியடிப்பார் என எதிர்பார்க்கவில்லை. இந்த சாதனையை பாகிஸ்தானியர் முறியடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் ஓய்வு பெறும்வரை என் சாதனை முறியடிக்கப்படக் கூடாது என நினைத்திருந்தேன். ஏனெனில் என் பெயரைக் குறிப்பிடும்போதெல்லாம் அந்த சாதனையும் நினைவுகூரப்படுவது எனக்கும், பாகிஸ்தானுக்கும் பெருமை அளித்தது.

அதிக சிக்ஸர் அடித்த 3-வது வீரர்:-

ஆண்டர்சன் இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 14 சிக்ஸர்கள் அடக்கம். ஒருநாள் ஆட்டங்களில் தனிநபர் அடித்த 3-வது அதிக பட்ச சிக்ஸர்கள் இதுவே. இதற்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்திருந்தபோது 16 சிக்ஸர்கள் அடித்திருந்தார். வங்கதேசத்துக்கு எதிராக 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 15 சிக்ஸர்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

22 சிக்சர்:-
நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் மொத்தமாக 22 சிக்சர்கள் (ஆண்டர்சன் 14, ரைடர் 5, மெக்கலம் 3) விளாசினர். இதன்மூலம் ஒருநாள் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த அணிகள் வரிசையில் நியூசிலாந்து அணி, இந்தியாவை (19 சிக்சர்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது.

சாதனை குறித்து கோரி ஆண்டர்சன் கூறியது:-

ஆரம்பத்தில் ஓரிரு ரன்கள் எடுத்து ரைடருக்கு கம்பெனி கொடுக்கவே நினைத்தேன். ஆனால், பின்னர் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. பந்து சிக்ஸருக்குப் பறக்க வேண்டும், அல்லது ஆட்டமிழக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே நாங்கள் இருவரும் ஒவ்வொரு பந்தையும் எதிர் கொண்டோம். கடைசியில் எனது ஆட்டம் சாதனையில் முடிந்தது. அப்ரிடியின் சாதனையை முறியடிப்பது குறித்து நான் முன்கூட்டியே திட்டமிடவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: