செய்திகள்,முதன்மை செய்திகள் முதல்வர் ஆனார் கெஜ்ரிவால்…

முதல்வர் ஆனார் கெஜ்ரிவால்…

முதல்வர் ஆனார் கெஜ்ரிவால்… post thumbnail image
70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.

இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.

கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கெஜ்ரிவால் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளதன் மூலம் டெல்லியில் கடந்த 2 வாரமாக நீடித்த இழு பறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி