செய்திகள்,முதன்மை செய்திகள் முதல்வரின் கனவு – குஷ்பு …

முதல்வரின் கனவு – குஷ்பு …

முதல்வரின் கனவு –  குஷ்பு … post thumbnail image
சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வாக்குகளே உண்மையான வாக்குகள். அந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி திமுகதான் வெற்றி பெற்றது.காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டும் திமுகவைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனவேதான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். ஆனால், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வந்ததை யாரும் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. இவற்றுக்குத் தீர்வு காண முடியாத முதல்வர் ஜெயலலிதா, நான் தான் அடுத்த பிரதமர் என்று கூறி வருகிறார். தமிழர்களின் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்திருந்தால் சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கமாட்டார்.

உண்மையான தமிழர்களின் தலைவர் கருணாநிதிதான். அட்டப்பாடி தமிழர்கள் பிரச்னையாகட்டும், ஈழம், சிங்கப்பூர் தமிழர்கள் பிரச்னையாகட்டும் அனைத்துக்கும் முதலில் குரல் கொடுப்பவர் அவர்தான்.இந்திய அரசியல் வரலாற்றில் வாஜ்பாய், வி.பி.சிங், குஜ்ரால் என அனைவரையும் பிரதமர் நாற்காலியில் அமர வைத்த பெருமை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய அரசியலில் கோபாலபுரம் வீட்டில் கதவை தட்டாத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம்.இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று கட்சியின் பொதுக்குழுவில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறி உள்ளார். இருப்பினும் தனித்து போட்டியிடக்கூடிய தைரியம் தி.மு.கவுக்கு உண்டு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிகாட்டுபவரே பிரதமராக முடியும்.

தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் செல்வாக்கு இல்லாத ஜெயலலிதா, எப்படியாவது பிரதமர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது ஒட்டு மொத்த பிரதமர் கனவின் நோக்கமே பெங்களூரு வழக்கை முடிப்பது தான். ஈழத் தமிழர் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாகக் கூறிய ஜெயலலிதா, அந்தத் தீர்மானத்துக்கு இடப்பட்ட பேனா மை காய்வதற்குள் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்ற சுற்றுச்சுவரை இடித்து தனது இரட்டை வேடத்தைக் காட்டியவர். முதலில் தமிழகத்தை காப்பாற்றுங்கள்; அப்புறம், இந்தியாவை பார்க்கலாம். ஜெயலலிதா பிரதமராகி விட்டால், தமிழகத்தில் உள்ள பிரச்னை தீர்ந்து விடுமா? இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி