செய்திகள்,முதன்மை செய்திகள் ஜால்ரா அடிக்கும் அமெரிக்கா…

ஜால்ரா அடிக்கும் அமெரிக்கா…

ஜால்ரா அடிக்கும் அமெரிக்கா… post thumbnail image
இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழும் போது நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இதனால் மோடிக்கு விசா கொடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.

அமெரிக்கா பரிசீலனை :

2014ம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்க பிரதிநிதிகள் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வாஷிங்டனில் கருத்து நிலவுகிறது. மேலும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்குவது தொடர்பாகவும் அமெரிக்க நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத வேறுபாடுகளை எதிர்த்து முழக்கமிட்டு மோடி பேசியது, இந்தியாவின் 2014 பொதுத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோடிக்கு விசா வழங்க பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

காங்கிரசின் தோல்வி :

லோக்சபா தேர்தலின் அரையிறுதி சுற்று என வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது அமெரிக்க நிர்வாகிகளை சற்று சிந்திக்க வைத்துள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள ஓட்டுக்கள், மோடிக்கு விசா வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை குழு தலைவர் எட் ராய்சி, மோடிக்கு விசா வழங்குவதற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பலவீனமானது என தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான பலமான நட்பை இந்த தீர்மானம் பலவீனமாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இரு நாடுகளிடையே நல்லுறவு இருந்து வருகிறது; ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; இந்த தீர்மானம் அமெரிக்காவில் கடுமையாக பணியாற்றும் இந்தியர்களையும் பாதிக்கும்; அதனால் இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக அவர் மோடிக்கு விசா வழங்குவது பற்றி அமெரிக்கா ஆலோசித்து வருவதை தெளிவுபடுத்தி உள்ளது.

அமெரிக்காவின் கருத்து :

லோக்சபா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க இந்திய அரசியல் நடவடிக்கை குழு, இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அது குறித்து அமெரிக்கா எதுவும் கூற முடியாது; தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சியில் இருக்குமா, இருக்காதா என யாருக்கும் தெரியாது; இந்தியா ஒரு இறையாண்மை நாடு; அதன் மக்களுக்கு அவர்களின் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு; குஜராத் முதல்வர் மோடியை குறிவைத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதோ இல்லையோ; ஆனால் அமெரிக்காவின் இத்தகைய கொள்கைகள் தவறானது; அமெரிக்காவை போலவே இந்தியாவும் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான சட்டமுறையை கொண்டது; இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டோ, சிறப்பு புலனாய்வு குழுவோ மோடிக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை; அப்படி இருக்கும் போது பிரதமர் வேட்பாளரான மோடிக்கு விசா அளிக்க மறுக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது ஏன் எனத் தெரியவில்லை; இது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாட்டில் நடப்பதை போன்று உள்ளது. இவ்வாறு அரசியல் நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்.,க்கு ‘டாடா’ :

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது ஆலோசனைக் குழு கூறிய சீரமைப்புக்களை செய்ய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டதாலும், டில்லியில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்த மரணஅடி தோல்வியாலும் காங்கிரஸ் அரசுக்கு ‘குட்-பை’ சொல்ல அமெரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கும் சாதக பாதகங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கடந்த ஆண்டே அமெரிக்காவின் முக்கிய சட்ட நிபுணர்கள் குழு ஆராய்ந்து விட்டது. இதனால் இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அற்கு முன் இந்தியாவுடனான நெருங்கிய உறவை பலப்படுத்த கொள்கைகளில் சில மாற்றங்களை கொண்டு வர அமெரிக்க நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அமெரிக்காவிற்கான தெற்காசிய நிர்வாகி நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இத்தகைய முடிவு அமெரிக்க தொழில்துறையும், வர்த்தக குழுவும் ஐக்கிய முற்போக்கு அரசுடன் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பூசல்களை வெளிப்படுத்துகிறது. மத்தியில் புதியதாக ஆட்சி அமைக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா பச்சைக்கொடி காட்ட தயாராக உள்ளதையும் அமெரிக்க நிர்வாகம் உறுதிபடுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி