எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்

விளம்பரங்கள்

Tamil Raasi Kumbham

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
6. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
7. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
9. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
10. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்


பேரன்புடைய கும்ப ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழி நலம்!!!

நவக்கிரகங்களில் வசந்தகாலத்தை வரவழைத்துக் கொடுக்கும் ஸ்ரீ சனி பகவானை ஆட்சிகிரகமாகக்கொண்டு, வீடாகவும் ராசியாதிபதியாகவும் அமையப்பெற்ற உங்கள் ராசிக்கு 11,2க்குடைய தர்மஸ்தானாதிபதியும், தர்மகர்மாதிபதியும், தனகுடும்பவாக்கு ஸ்தானாதி பதியும், லாபஸ்தானத்திற்கு அதிபதியுமான ஸ்ரீகுருபகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு தைர்ய ஸ்தானமும் மூன்றாமிடமான மேஷராசியில்; சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு சுகஸ்தானமும் நான்காமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

உங்கள் ராசிநாதன் சனி என்பதால் எந்தக் காரியத்தையும் நிதானமாகவே செய்வீர்கள். அமைதியைக் கடைப்பிடித்து அருகில் இருப்பவர்களின் ஆதரவைப் பெருக்கிக் கொள்பவர்கள் நீங்கள்.தன்னம்பிக்கையை இழக்கிற பொழுதெல்லாம், ஆன்மீகப் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் வழியே நடந்து வெற்றி பெறுவீர்கள். கூட நட்பாக்கிக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. சுயமாக சிந்தித்து செயல்படும் மனப்போக்கு உடையவர்கள். தன்னைத்தானே விமர்சிக்கும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு. பந்த பாசங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றாலும் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடுவீர்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் நீங்கள் ஒரு சில சமயங்களில் ரகசியங்களை வெளியிட்டு அல்லலுக்கும் ஆளாக நேரிடும். கொள்கைப் பிடிப்பை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் கூடிய விரைவில் முன்னேற்றங்களைக் காண இயலும்.

எப்போதும்-எல்லோரிடமும் பதற்றம் இல்லாமல், அதே நேரம் எவ்வித பாகுபாடு பார்க்காமலும் பேசிப் பழகி சமூகத்தில் மிகுந்த மதிப்பு, மரியாதையுடன் வாழ்ந்து வரும் நீங்கள் சரியான நேரத்தில் சரியானவர்களை, சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பவர்கள் நீங்கள். பழம் பெருமை பற்றி அடிக்கடி எடுத்துச் சொல்வீர்கள். நட்பு வட்டம் உங்களுக்கு அதிகமாகவே இருந்தாலும், ஒரு சிலரை மட்டுமே நம்பிச் செயல்படுவீர்;கள். சிக்கனத் தோடும் இருப்பீர்கள். செலவழிக்கும் பொழுதும் தாராளமாகச் செலவு செய்வீர்கள்.

பொதுப்பலன்கள்

வரம் கொடுக்கும் குரு நான்கில் வளர்ச்சி தடையாகும் தளர்ச்சி கூடும்
பொன்னான குருபார்வை சகல சுக போகங்களையும் பெருகவைக்கும்
சனியின் சஞ்சாரம் சரியில்லை, சிக்கல், சிரமம், சஞ்சலமான மாற்றம் காணும்
நிழல் கிரகங்களின் அற்புத சஞ்சாரம் தனிராஜங்கம் நடத்திடும்

– இதுவரை தைரிய ஸ்தானமெனும் மூன்றாமிடத்திலிருந்த ஸ்ரீகுரு பகவான் இப்போது சுக ஸ்தானமென்னும் நான்காமிடத்திற்கு வந்திருக்கிறார். நான்காமிடத்தில ;நன்மைகள் எதையும் செய்ய முடியாதவர் தான் ஸ்ரீகுரு பகவான். ஆனால் மூன்றாமிடத்தை விட நான்காமிடம் ஒரளவு பரவாயில்லை என்று தான் சொல்ல முடியும்.

மூன்றாமிடத்தில் இருந்த போதும் மட்டும் குரு பிரமாதமாக என்ன செய்து விட்டார்? உங்கள் தைரியத்தை, தன்னம்பிக்கையை இழக்கவே செய்தார். சகோதர சகோதரிகள் மற்றும் வேண்டியவர்களின் கணிசமான உதவிகளைக் குறைத்தார். ஒரு சிலர் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளவும் காரணமாக இருந்தார். இனி அப்படியெல்லாம் செய்யமாட்டார். அதே நேரத்தில் நன்மைகளையும் செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறார். எல்லாமே நிறைவாக இருந்தாலும் உங்கள் மனதுக்கு மட்டும் ஏதோ குறை இருப்பது மாதிரி தெரியும். வேளைக்குச் சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் அவதிப் படுவீர்;கள். அதிகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயமாக வில்லங்கங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. தொழில் வியாபாரத்தில சுதந்திரமாக இயங்க முடியாத குறுக்கீடுகள் வரும்.தவறான அட்வைஸ் தர பலர் வருவார்கள்.ஏடாகூடமாகஏதுவாவது நடந்து விடுமோ என்று பதட்ட நிலை இருக்கும். தெய்வ அருளால் அவ்வப்போது சில அற்புதங்களும் நடக்கும்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலவரத்தை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 1,12 ஆகிய இடங்களுக்குரியவரும் அதிபதியும் விரயஸ்தானாதிபதிமான ஸ்ரீ சனிபகவான் இப்போது உயர்வான பாக்கியஸ்தானமென்னும் ஒன்பதாமிடமான துலாம் ராசியில் ஸ்ரீசனிபகவான் தொடர்ந்து சஞ்சரிப்பது சனியைப் பொறுத்தவரையில் நல்ல இடமில்லைதான். ஆனால் பாதகம் எதுவும் ஏற்படாத அம்சமாகும். எனவே இதுவரை இந்த ராசி யினரை பிடித்திருந்த அஷ்டமத்துச்சனி விலகிவிட்டார்.நீங்கள் இனி நிமிர்ந்து நிற்கலாம். அதிர்ஷ்டகரமான யோகமான நன்மையான பலன்களைத்தரத் தயாராக இருக்கிறார். எனவே சனியின் சஞ்சாரத்தைப்பற்றி கவலைப்படாமல் சந்தோஷ வாழ்க்கை யைத் துவங்கத் தயாராகுங்கள். எனவே இவரது இரண்டரை ஆண்டுகால ஸ்ரீசனிபகவானின் சஞ்சாரம் பற்றி சிறிது ஆராய்வோம்.

கும்ப ராசிகாரர்களுக்கு ஸ்ரீ சனி பகவான் இனிமேல் சஞ்சரிக்கும் ஒன்பதாமிடமும் ஸ்ரீ சனி பகவானின் சஞ்சாரத்திற்கு அவ்வளவாக உகந்த இடம் அல்ல. பொதுவாக யோகஸ்தானமென்றும் ஜோதிட நூல்களும் கூறவில்லை.

ரெண்டு, நான்கு, ஐந்தேழு, எட்டு, ஒன்பான், பத்து, ஈறாறில்
நாமெனவேநின்றபலன்நவிலக்கேளுநாடிவரும்பகையோடுஅலைச்சல் உண்டாம்
போமெனவே தனதான்ய சேதமாகும் பொல்லாத பீடையுடன் வழக்கு நேரும்

– என்று தான் கோட்சார சிந்தாமணியும் கூறுகிறது.

ஆனால் இதையே புலிப்பாணி சித்தர் நன்மை-தீமை இரண்டையும் சேர்த்துச் சொல்லுகிறார்.

சனி நிதியில் பலன் சென்மன் பிறக்க
ஆளடிமை செல்வன்,அன்றும் சென்மனுக்கு
விதியுண்டு சேவன் பிதிர் நஷ்டமடி மகளே

– ஸ்ரீ சனி பகவான் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் போது தனக்கு ஆளடிமை சேரும். செல்வம் பெருகும். நல்ல அதிர்ஷ்டகரமான யோக பாக்கியமுண்டு. ஆனால் தகப்பன் (மாரக தெசையில்)இறக்க நேரிடும் என்று ஏற்படுகிறது.எனவே இது கெடுபலனில் சேர்ந்தது.

– கோட்சார சிந்தாமணியும் ஒன்பதாமிடத்துச்சனியின் கெடுபலன்களையே பாடலின் மூலம் குறிப்பிட்டிருக்கிறது.

ஆமெனவே சனி யொன்று, ரெண்டு, நான்கு
ஐந்தேழு எட்டொன்பான் பத்தீராறில்
நாமெனவே நின்ற பலன் நவிலக்கேளு
நாடி வரும் பகையோடு அலைச்சல் உண்டாம்
போமெனவே தனதான்ய சேதமாகும்
பொல்லாத பீடையுடன் வழக்கு நேரும்
ஆமெனவே ஆரோக்கியம் குறைந்து போகும்
அடுத்திடும் ஈனப்பகையும் சண்டைதானே

– எனவே ஒன்பதாமிடத்துச் சனியைப்பற்றி சாதகமான பலன்களைச் திருப்திகரமாக சொல்லவில்லை. பொதுவாக நல்லதும், கெடுதலுமாக தான் ஜோதிட நூல்கள் கூறி இருக்கின்றன. என்றாலும் அஷ்டமத்து சனி விலகியதாலே அநேக நன்மைகள். அப்பாடா! அதுவே பெரிய விசேஷமல்லவா.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்களின் சஞ்சார நிலவரத்தை அனுசரித்து பார்க்கையில் யோகக்காரகன் ஸ்ரீ ராகு பகவான் 10-ல் பலன் செய்வார். அதேபோல் ஞானக்காரகன் ஸ்ரீகேது பகவானின் தொடர்ந்து இப்போது 4-ல் சஞ்சாரம் செய்திருந்தாலும் நல்லது செய்வார். ராகுவும், கேதுவும், பாவ கிரகங்கள் தான்.அவர்கள் கேந்திரஸ்தானம் எனப்படும் பத்தாம் இடம், நாலாம் இடம் வருவது நல்லது. என்றாலும் இது கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும், பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும், செயல்படவேண்டிய அமைப்பு.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி உங்களுக்கு பாம்பு கிரகங்கள் இரண்டும் ராசி மாறி யோகக்காரகனான ஸ்ரீராகு பகவான் உங்கள் ராசிக்கு 9மிடமும், பாக்கிய ஸ்தானமுமான துலாம் ராசியிலும், அதே நேரம் ஞானக்காரகனான ஸ்ரீகேது பகவானும் உங்கள் ராசிக்கு 3-மிடமும், தைர்ய வீரபராக்கிரமஸ்தானமுமான மேஷராசியில் பிரவேசித்துசஞ்சாரம் செய்கிறார்கள். ஆக இரண்டு பாம்பு கிரகங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து கெடுபலன்களைத் தூள் பரத்தி அடித்து-அட்டகாசமான அதிர்ஷ்டகரமான பலன்களை தரப்போகிறது. எனவே நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருப்பீர்களேயானால் உங்கள் ரூட்டிலே யாரும் குறுக்கிட மாட்டார்கள். இந்த ஒரு காலகட்டங்களில் நீங்கள் எதிலும் மாட்டிக் கொள்ளாமல் தாமரை இலைத்தண்ணீர்; மாதிரி இருந்தீர்களேயானால் நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். பிரமிப்பூட்டும் அதிசயங்கள் அற்புதங்கள் நடக்கும். உங்களின் வாழ்க்கைத்தரம் கோபுரம் போல் உயர்வதுடன் நீண்ட கால லட்சியங்களும் நிறைவேறும்.

ஸ்ரீகுருபகவான் சஞ்சார நிலவரம்

இந்த குருப்பெயர்ச்சியின் பலன்கள் எப்படி இருக்கும் என்று அறிவதில் ஆவலாகத்தான் இருக்கீறீர்கள். குருவால் ஏற்படும் பலன்களும் பல விதமான மாற்றங்களை உங்களுக்கு வழங்கப்போகின்றன என்பது நிஜம். இக்காலத்தில் நீங்கள் இனிய மாற்றங்களை காணப் ;போகிறீர்கள். படாடோபமும், பரபரப்பும் கலந்த வாழ்க்கையை காண்பீர்கள். இப்போது கொஞ்சமாவது ஆறுதல், மாறுதல் ஓரளவு கிடைக்கும். அதோடு ஸ்ரீகுருபகவானின் பார்வைகள் இடம் மாறி வீசுவதால் சில அனுகூலமான ஆதரவான திருப்பங்கள் ஏற்படுதலுமுண்டாம். ஸ்ரீகுருபகவான் நன்மையைச் செய்யமாட்டார் என்றாலும் தீமைகளையும் செய்ய முடியாது நம்புங்கள். எனவே குருவைப்பற்றி அதிகமாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதிர்ஷ்டம் என்பது அளவாகத்தான் இருக்கும். அதிரடி மாற்றம் என்பது ஒரு சிலருக்குத்தான் காத்திருக்கும். மற்றவர்கள் எப்போதும் போல இயல் பாகத்தான் இருப்பார்கள். எனவே சுகஸ்தான குரு சோதனை காலங்களில் கூட சாதனைக்காலங்களாக மாற்றுவதோடு, வேதனைகளையும் சந்தோஷங்களாக மாற்றுவார். பொதுவாக நான்காமிடத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரிப்பதை பற்றி எந்த ஜோதிட சாஸ்திரங்களும் நல்ல பலன்களை சொல்லவில்லை.

ஜோதிட சாஸ்திரங்களும் – ஜோதிடச் சுவடிகளும்

என்ன சொல்கின்றன என்பதை கீழே வரும் பாடல்கள் மூலம் அறியலாம்.

சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டுப்பத்து
வல்லவே பன்னிரெண்டில் இருந்து வாழ வலைச்சலோடு சத்ரு நிஷ்டுர வாதம்
புல்லவே சகோதரர், தாய், மனையாள்,புத்திரனின் நலம்கெடும் பொருளும் போகும்
அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே

-என்று ஜாதக சித்தி நூல் சொல்லுவதில் மனத்திலே சஞ்சலத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.

பொன்னவன் மூன்று நாலில் பொருந்து பத்தாறில் எட்டில்
உன்னிய பன்னிரெண்டில் ஒரு சன்மந்தன்னில் நின்றால்
மன்னரால் பதியும் சேதம் மாதரால் வியாதி மந்தம்
நன்னிய தலைமயக்கம் நவிலுவாய்ப் புண்ணுண்டாமே

– என்ற ஜாதகலங்காரப் பாடல்களாலும் இக்கருத்தை அறியலாம்.

தர்ம புத்திரர் நாலிலே வனவாசமப்படிப் போனதும்
– என்று ஒரு பாடலும் உண்டு. அதாவது பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமருடைய ராசிக்கு நான்காமிடத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரித்த போதுதான் பஞ்சபாண்டவர்களும் வனவாசம் போனார் களாம்…. அதாவது நான்காமிடத்தில் குரு வந்தால் காட்டில் இருந்தாலும் நாட்டில் இருந்தாலும் சோதனையும், வேதனையும் அனுபவிப்பதோடு குடும்பத்திலே அமைதியும், மனத்திலே நிம்மதி யும் இழந்து படாதபாடு படவேண்டியது என்பதுதான் பொருள்.

பொதுவாக நாலிலே குரு வந்தால் என்பதற்கு இன்னொரு பாடலும் கீழே தந்துள்ளோம். அதன் பொருள் வீட்டில் இருந்தாலும் அலைச்சல், திரிச்சல், அலைக்கழிப்பு என்று இதற்கு பொருள் கொள்ளுதல் வேண்டும்.

பத்துடன் மூன்றும் நான்கும் பன்னிரெண்டோ டுற்ற
மத்திமம் ஆறில் ஒன்றில் மன்னவன் இருந்த காலை
நித்தமும் அலைச்சல் தந்தும் நீட்டுரம் வாதபித்தம்
பெற்றவன் கேடும் பிள்ளை பெண் ஜாதி பகையுமாவாள்

– என்று வருஷாதி நூல் சோகத்தை வெளியிடுகிறது.

இதைவிட புலிப்பாணி முனிவர் இன்னும் விரிவாகவும், விளக்கமாகவும், உபரியாகவும் விஷயங்களை சேர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார்.

சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே
அல்லப்பா அகிலங்கள் எல்லாம் தோற்று அப்பனே ஆரண்யம் சென்றாரென்றால்
நல்லப்பா நாலதனில் குருவும் ஏறவேதை நரச்சுகமும் கிட்டாது நலிவும் உண்டு மல்லப்பாமண்ணாலும்பொன்னாலும்மேகத்தானேகுருவதனின்கொடுமை தானே?

– இது புலிப்பாணி முனிவர் பாடிய பாடல். சூதாட்டம் கொடுமையானது. கெடுதலானது. சுகமாய் வாழ்ந்த பஞ்ச பாண்டவர்களும் தீவினையால் சூதாடி, தோல்வியடைந்து நாடு, நகரங்களை யெல்லாம் இழந்து காட்டுக்குப் போனார்கள். நான்காமிடத்தில் சஞ்சரித்த ஸ்ரீகுருபகவான் அதற்கு காரணமாகும். இத்தகைய நான்காமிடத்து ஸ்ரீகுருபகவானால் மனித உதவி, சொந்தம், பந்தங்களின் சகாயம், சுகம் ஆகியவை கிடைக்காது. அசௌகரியங் களும், உடல் ஆரோக்கியம் குறைந்து நோய் நொடிகளால் பாதிப்பும் உண்டு. பொன், பொருள், மண் போன்ற சொத்து பத்துக்களை இழக்கவோ, அல்லது இவற்றை முன்னிட்டு அல்லல் அலைக்கழிப்பு படவோ நேரும். இவையெல்லாம் நான்காமிடத்து ஸ்ரீகுருபகவானால் ஏற்படக்கூடிய கொடுமைகள் மேற்கண்ட பாடலின் அர்த்தங்களாகும்.

சதுர்த்த குரு ஸ்தான சலனம்- என்ற பழமெழிக்கேற்ப இடமாறுதல்கள் ஏற்படவும் ஞாயமுண்டு. குடியிருக்கும் வீடோ, செய்தொழில்,வியாபாரம், இட மாறுதலோ, பெயர் மாறுதலோ ஏற்படும். அலைச்சல், திரிச்சலான அலைக்கழிப்பு பயணங்களும் உண்டு.

முயற்சிக்கும் காரியங்களில் இருந்து வந்த குறைகோளாறுகளும் குளறுபடிகளும் அலைச்சலும், அலைக்கழிப்பும், சுற்றலும், சுணக்கமும், தடையும் தாமதம் இருந்து வந்த நிலையில் அனாவசியமான காரியங்களில் கூட தலையிட்டுப் பேரைக் கெடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமையும், ஜீவனம் சம்பந்தப்பட்ட வகையில் எல்லாமே சோதனையும், வேதனையும் உலுக்கிக்கிட்டிருந்த போக்கெல்லாம் மளமளவென்று விலகிடும்.

பொருளாதாரத்தில் பணவருமானத்தில் அதிருப்தியும், பற்றாக்குறையும் இருந்திடும். பொது பணத்தின் பொறுப்புகளில் உங்கள் நாணயம் சந்தேகப்படலாம். பணவிஷயத் தில் உங்களைச் சேர்ந்தவர்கள் செய்யும் தவறுகள், தில்லுமுல்லுகள் தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்படுத்தி, தத்தளிக்க வைக்கலாம். நீங்களே எக்குதப்பான பணப்பிரச்னைகளில் சிக்கிக் கொண்டு திக்குமுக்காடும்படி ஆகலாம்.

செய்தொழில், ஜீவனம் சம்பந்தப்பட்ட வகையில் எதுவானாலும் நல்ல மாறுதலான திருப்பம் ஏற்படும்.முன்பிருந்த மாதிரி மந்தநிலை டென்ஷன் இருக்காது என்றாலும், மலையைக் கிளறி எலியைப் பிடித்துக்கொண்டிருப்பீர்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட வகையிலும், கணக்கு வழக்கு வகையிலும் மட்டும் எச்சரிக்கையும் அவசியம் தேவை.

குடும்பத்தில் சுகங்களும் சௌகர்யங்களிலும் அடிப்படையான வசதிகளில் சிக்கல், சிரமங்களும், நெருக்கடி, கெடுபிடிகளும் உண்டாகிடும். தேவைகள் பூர்த்தியாகாமல் பிரச்சினைகளும் குழப்பங்களும் உருவாகி குடும்பத்தில் அமைதியும், மனத்தில் நிம்மதியும் கெட்டிடவும் ஞாயமுண்டு. கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டும். ஸ்திர சொத்துக்கள், பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாகவும் வில்லங்கமும், விகல்பமும்; ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:- நீங்கள் பழைய நிலைமைக்கு வரமுடியும் என்றா லும் அடக்கி வாசிப்பது நல்லது. நல்லபடி இந்த சூழ்நிலையை கடத்த முயலுங்கள்.

மாணவர்களுக்கு:- கல்வியில் மந்த நிலைமை உண்டாகும். உயர் படிப்பும், மேல்படிப்பும் பாதித்திடும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும், உருவாகும்.

வியாபாரிகளுக்கு:-மாற்றமும், ஏற்றமும் இரண்டுமே இருக்காது. பொறுமை யையும்,நிதானத்தையும் கடைப்பிடித்து எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களுக்கு:- முன்னேற்றத்திற்கான தடைகளும், தாமதங்களும் ஓதுங்கி பாடுபடும் அளவிற்குபலன்கள் கிட்டிடும்.சிலர் புதியமுயற்சிகளில் ஈடுபடுவர்.

கலைஞர்களுக்கு:- இதுவரை இருந்து வந்த அலைச்சல் திரிச்சலான போக்கிலே மாறுதலான நன்மைகள் ஏற்படும். எனவே இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:- பேச்சு, வார்த்தைகளில் மிகவும் பொறுமையும், நிதானத் தையும் கடைபிடிக்க வேண்டும். கூட்டாக செய்வது எதையும் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு:- கடுமையான குடும்ப சுமை ஓரளவு குறைந்தாலும் குடும்ப பொறுப்பு மட்டும் உங்களை விட்டு அகன்றிடாது. பொறுமையும், நிதானமும் தேவை.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீகுருபகவான் தமது ஐந்தாம் பார்வையால் இந்த ராசியில் எட்டாம் இடமான கன்னியில் பார்ப்பதால் எதிர்பார்த்த முயற்சித்த காரியங்கள் எதிர்பாராமல் நடக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான ஆதாயங்களும்,அனுகூலங்களும் கிட்டிடும். வெட்டித ;தனமான விரயமும் மட்டுப்படும். நீடித்த வியாதி, மறைமுக வருமானம், எதிர்பாராத வருமானமெல்லாம் கூட தக்க சமயத்தில் உதவியாக கைக்கு கிட்டிடும். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்களில் என்ன என்று இதுவரை தெரியாது இருந்தவர்களுக்கு தெரிய வரும்.

ஸ்ரீகுருபகவான் தமது ஏழாம் பார்வையால் இந்த ராசியின் பத்தாம் இடமான விருச்சிகத்தில்; பார்ப்பதால் விசேஷமான பிரமாதமான அதிர்ஷ்டகரமான நன்மைகள் தரக்கூடிய பலன்கள் ஏற்படும். அனுபவித்துவந்த துன்பங்களும், தொல்லைகளும் மட்டுப்படும். முயற்சிக்கும் காரியங்களில் முன்னைவிட உருப்படியாக பலவற்றை செய்து முடிப்பீர்கள். செய்தொழில், வியாபாரம், ஜீவனம் எதுவானாலும் முன்னேற்றமும் அருந்திடும்.

ஸ்ரீகுருபகவான் தமது ஒன்பதாம் பார்வையால் இந்த ராசியில் பன்னிரெண்டாம் இடமான மகரத்தில் பார்ப்பதால் இந்த ராசி நேயர்களில் சிலர் வெளிநாட்டுப் பயணமோ அல்லது நீண்ட தூர தீர்த்த யாத்திரையோ செல்லவும் ஞாயமுண்டு. கணிசமாகவும் சரளமாகவும் பணம் புரளுவதால் பொருளாதார வசதிகள் இருந்து வரும். ஓரளவு செலவு இனங்கள் குறைந்து சிக்கனத்தால் சேமித்திடவும் ஞாயமுண்டு. சிலர் சொத்துக்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஜீவனம் சம்பந்தமான செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் மூலதனமாக முடக்கி விடுவார்கள்.

நட்சத்திரப்பலன்கள்

அவிட்டம் நட்சத்திரம் 3,4-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

பொன் பொருள் அதிகம் வந்து சேரும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் அனுகூலமாக இருக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். செய்தொழிலில் நிதான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும். கலைஞர்களும் அரசியல்வாதிகளும் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியம் திடீரென்று நடக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பண நெருக்கடி இருக்காது. நல்லதை நினைத்து நல்லதையே செய்வீர்கள்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ராஜயோகம் தரும் சதய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும். தடைப்பட்ட பணிகள் தானாகவே நடக்கும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். செய்தொழிலில் திடீர் திருப்பம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வரும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் துவங்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்குக் கிடைக்கும். முன்னேற்றமாகவே இருக்கும். எதைத் தொட்டாலும் வெற்றி தான். உயர்வுகள் இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலம் மிகவும் அதிர்ஷ்டமாகவே இருக்கும். அற்புதங்கள் நடக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டத் திருப்பம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். எதிர்கால திடடங்களை பரீசிலனைக்குக் கொண்டு வருவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.நல்ல செய்திகள் வரும்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை- இந்தக்காலக் கட்டம் சற்றுத் தளர்ச்சியான பலன்களே. அதிக உழைப்பை உண்டாக்கும். பத்து நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை பதினைந்து நாட்களில் முடியும். எப்படியோ வேலை முடிந்தால் சரி பணம் வரும். முயற்சிக்கும் காரியங்களில் சாதகமாக இருக்காது என்றாலும் சோதனையாக இருக்காது. கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை- இந்தக்காலக்கட்டம் உங்களைச் சிந்திக்க வைப்பதாக இருக்கும். எங்கும், எதிலும் தவறுகள் ஏற்படா வண்ணம் ஜாக்கிரதையாக பார்த்து நடந்துக் கொள்வது நல்லது. செய்தொழில், வியாபாரத்தில் ஏற்படவிருந்த குழப்பம், குளறுபடிகள், சமயத்தில் சாதுர்யமாக-சாமர்த்தியமாக தவிர்த்து விடுவீர்கள். உத்தியோக ஸ்தர்களுக்கு மறைமுகஆதரவு கிட்டும்.

ஜூலை – 1-7-2012 முதல ;31-7-2012 வரை – இந்தக்காலக்கட்டம் நீங்கள் நினைப்பது ஓரளவு நிறைவேறும். வருமானங்கள் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் தெரியும். செய்தொழில், வியாபாரம் சீராக நடக்கும். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு உற்சாகமான சூழ்நிலையே. டென்ஷன் குறைந்திருக்கும். முன்னேற்றமான வெற்றிகரமான நலன்களைப் பெறும்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை – இந்தக்காலக்கட்டம் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். அலைச்சல், மனஉளைச்சல் அதிகமாக இருக்கும். இனம் புரியாத பதட்டம் இருந்திடும். தீவிர முயற்சியாலும், கடும் உழைப்பால் மட்டும் எந்த காரியமும் நடக்கும். செய்தொழில், வியாபாரம் மந்தம் தான். லாபம் குறைந்திடும். பணரொட்டேஷனுக்கே சிரமப்படவேண்டிவரும். பிரச்னையொன்று விஸ்வரூபம் எடுக்கும்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை – இந்தக்காலக்கட்டம் நன்மையான பலன்களையே பெருமளவு எதிர்பார்க்கலாம். முயற்சிக்கும் காரியங்கள் சாதகமாகவே கைகூடும். தடைபட்ட, சுணக்கமான, பணிகள் நடைபெறும். புதிய அறிமுகங்கள், புதிய வாய்ப்புகள் கிட்டிடவும் கூடும். பணநெருக்கடி, குறைந் திருக்கும். கடன் நிர்பந்தம் தராது. செய்தொழில், வியாபாரம் முன்னேற்றமாகவே நடைபெறும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை – இந்தக்காலக்கட்டம் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும். மனதிலிருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள், சங்கடங்கள், மனோவியாக்கூலங்கள் மறையும். நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவும், அனுகூலங்களும், உதவிகளும் கிட்டிடும். செய்தொழில், வியாபாரத்தில், நெருக்கடிகள், கெடுபிடிகள் இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு சந்தோஷச் செய்திகள் வரும்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக்காலக்கட்டம் பின்தங்கிய நிலை எற்பட்டுவிடுமோ என்ற பதட்ட நிலையும், டென்ஷனும், இருந்தாலும் கடைசியில் எதுவும் நடக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாக கிடைக்கும். முயற்சிக் கும் காரியங்களில் மந்தமும் உடல் நலத்தில் அசதியும் சோர்வும் சோம்பலும் அதிகரித்திடும். சிறு விபத்துக்கான அறிகுறி தென்படு வதால் எச்சரிக்கையும் அவசியம் தேவை.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இக்காலகட்டங்களில் முழு அளவு சாதகமாக இருக்குமென்று சொல்வதற்கில்லை. எதை செய்தாலும் ஒரு தடவைக்கு பல தடவை யோசித்துச் செய்வது நல்லது. செய்தொழில், வியாபாரத்தில் மறைமுக போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம்; ஏற்படும். சிலருக்கு சொத்துக்கள் மூலம் வில்லங்கம் ஏற்படும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இந்தக்காலகட்டம் பிரச்னைகள் இருந்தாலும் சமாளிக்கும்படி இருக்கும். தீவிர முயற்சியின்பேரில் தான் எந்தவேலையும் நடக்கும். செய்தொழில், வியாபாரத்தில் பார்ட்னர்களின் போக்கு அதிருப்தியும், கவலையும் தரும். நண்பர்களில் சிலர் விரோதியாவது தவிர்க்க முடியாததாகவும் இருக்கும். மனத்தில் சலிப்பு, விரக்தி காணப்படும். வாக்கு கொடுப்பதையும் நிறுத்திக் கொள்ளவும்.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை- இக்காலக்கட்டம் மந்தமாகத்தான் இருக்கும். பிரச்னை நிறைந்திருக்கும். எதை செய்தாலும், ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து இறங்குவது நல்லது. வீண் வம்புகளில் சிக்காதிருக்க முயலுங்கள். செய்தொழில், வியாபாரத்தில் எந்தமாறுதலும் கூடாது. உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகம் குறைந்திருக்கும். புதிய முயற்சிகளில் தடை தாமதமும் ஏற்படும்.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இக்காலகட்டம் மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கும். தீவிர முயற்சியின் மீது, கடும் உழைப்பின் பேரிலும் எந்தப் பணியும் நடக்கும். செய்தொழில், வியாபாரம் வழக்கம்போலத்தான் நடக்கும். அதிக லாபங்கள் எதிர் பார்க்க முடியாது. உத்தியோகஸ்தர்களின் பொறுப்புகள் கூடும். உபரி வருமானம் பாதியாக குறையும். செலவுகள் அதிகரிக்கும்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இந்தக்காலகட்டம் மிகவும் பயனுள்ளதே. விட்டதைப் பிடித்துவிடுவீர்கள் குருட்டு அதிர்ஷ்டங்கள் எதிர்பார்க்கலாம். பெரிய முன்னேற்றம் உண்டாகும். முயற்சிக்கும் காரியங்களில் நினைத்ததை செயல்படுத்துவீர்கள். பணவசதி பெருகும். கொடுக்கல், வாங்கல் சீராக இருந்து வரும். எதிர்பார்த்த கடனுக்கு வழிபிறக்கும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை – இந்தக் காலக் கட்டம் ஒரு திருப்புமுனையாக அமையும். தொடக்கம் பரபரப்பாக இருக்கும். வாழ்க்கையில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும். தெம்பும் உற்சாகமும் ஏற்படும் வகையில் எல்லாம் அனுகூலமாகவே இருக்கும். தேவைக் கேற்ப வருமானம் வந்துக் கொண்டிருக்கும்.

அடுத்ததாக ஸ்ரீகுருபகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி சஞ்சரிக்கப் போவது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமும், பூர்வ புண்ணிய ஸ்தானமான மிதுன ராசி உங்களுக்கு ஆதாயமாகவும், ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருக்கும். அதிர்ஷ்டங்கள், அற்புதங்கள் அதிகரிக்கும். எனவே நீங்கள் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று எள்ளு, உளுந்து, கொள்ளு, கொண்டைக்கடலை, ஆகிய தானியங்களை குரு, ராகு-கேது சந்நிதிகளில் வைத்து எள்ளு விளக்கேற்றி வைத்து ஸ்ரீசனிபகவானை வணங்குவதுடன் சனிக்கிழமைதோறும் காகத்திற்கு சாதம் வைத்து வழிபடுவது நல்லது.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: