ஜெயலலிதாவின் சூப்பர் கணக்கு….

விளம்பரங்கள்

jayalalitha_karunanidhi

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது பேச்சின்போது அடிக்கடி அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு உடனே எழுந்த முதல்வர் ஜெயலலிதா, நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, 31-7-2006 அன்று சட்டசபையில் பேச முயன்றபோது அப்போதைய முதல்-அமைச்சர் உள்பட பல அமைச்சர்கள் 65 தடவை குறுக்கிட்டு பேசி, என்னை பேச விடாமல் தடுத்தனர் என்றார்.

பின்னர் தொடர்ந்து துரைமுருகன் பேசினார். அவர் பேசுகையில், சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் உயர்மட்ட சாலை (பறக்கும் சாலை) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை அரசு நிறுத்தி வைத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெரிசலை தவிர்ப்பதற்காகவும், கண்டெய்னர் லாரிகள் நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகத்திற்கு விரைவாக செல்வதற்காகவும் எங்கள் தலைவர் கலைஞர் இந்த திட்டத்தை பிரதமரிடம் பேசி கொண்டு வந்ததுடன், இந்த திட்டத்தை பிரதமர்தான் தொடங்கிவைத்தார். இந்த திட்டப்பணியை நிறுத்திவைத்திருப்பதன் நோக்கம் என்ன என்று கேட்டார்? இந்த பணியைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அவர் பேசுகையில், குறுக்கிட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சரியாக ஆராய்ந்து பார்த்து இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. அவசர கோலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கூவம் ஆற்றின் மத்தியில் பறக்கும் சாலை அமைக்கப்படுவதால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. அதுகுறித்து உரியவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது என்றார்.

அதற்குப் புதிய தலைமைச் செயலகம் குறித்துப் பேசத் தொடங்கினார் துரைமுருகன். உடனே குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் துரைமுருகன் பேசும்போது, இந்த சட்டப்பேரவையில் இடநெருக்கடி உள்ளது என்று நான் சொன்னதாகவும், அதற்காக அவர்கள் வேறு இடத்தில் ஒரு புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்டியதாகவும், தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காக நாங்கள் அதைப் புறக்கணிப்பதாகவும், அதை வீணடிப்பதாகவும் இங்கே கூறினார்.

சட்டமன்ற பேரவை அமைந்துள்ள இந்த கட்டிடத்திற்குள் இடநெருக்கடி உள்ளது என்று நான் எப்போதும் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி என்றுதான் நான் குறிப்பிட்டேன்.

தி.மு.க. ஆட்சி காலத்தில், இதற்காக விசாலமான ஒரு பெரிய இடத்தில், இவர்கள் ஒரு புதிய கட்டிடத்தை எழுப்பியதாக கூறுகிறார்கள். அது ஏதோ முழுவதுமாக தலைமை செயலகத்திற்கு பயன்பட்டது போலவும், நாங்கள் வேண்டுமென்றே தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காக அதைப் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

உறுப்பினர் கூறுவதே தவறான தகவல் ஆகும். அரசாங்கத்தில் மொத்தம் 36 துறைகள் இருக்கின்றன. இவர்கள் கட்டிய அந்த பெரிய கட்டிட வளாகத்தில், கடைசி வரை அவர்கள் ஆட்சியில் இருந்தவரை அங்கே செயல்பட்டது 6 துறைகள் மட்டும்தான்.

மீதமுள்ள 30 துறைகளும் கடைசி வரை இதே புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தன. இவர்கள் அரைகுறையாக கட்டிவிட்டு, ஒட்டுமொத்த அரசு பணிகளும் அங்கே நிறைவேற முடியாதபடி, அரசாங்கத்தில் செயல்படுகின்ற 36 துறைகளும் அங்கே கொண்டு சென்று செயல்பட முடியாதபடி, இங்கும், அங்குமாக அரசு அதிகாரிகள் அலையவேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருந்தார்கள்.

புதிய கட்டிட வளாகத்தில் அமைச்சர்களுக்கு மட்டும் அறைகள் தயார் செய்யப்பட்டன. 36 துறைகளுக்கான அமைச்சர்களும் அங்கே உட்கார்ந்து இருப்பார்கள். ஆனால், அங்கு 6 துறை அதிகாரிகளுக்கும், அங்கே ஆவணங்கள் வைப்பதற்கு மட்டும்தான் அங்கே இடம் உண்டு. மீதமுள்ள 30 துறைகளைப் பொறுத்தவரை அந்த 30 துறைகளுக்கான அமைச்சர் மட்டும் புதிய கட்டிடத்தில் இருப்பார்கள். அவர்களுடைய துறை செயலாளர்கள், அந்த துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களும், ஒட்டுமொத்த ஆவணங்களும் இங்கேதான் புனித ஜார்ஜ் கோட்டையில்தான் இருந்தன.

ஆகவே, அரசு நிர்வாகத்தில் பெரும் தாமதமும், குழப்பமும் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக அரசு நிர்வாகம் அங்கே செயல்படக்கூடிய அளவில் அவர்கள் கட்டிடத்தைக் கட்டினார்களா என்றால் இல்லை. ஆறு துறைகள் மட்டும்தான் அங்கே செயல்படுத்தப்பட்டன. அதற்கு மேல் இடமாற்றம் செய்வது என்றால், மேலும் ஒரு துறைக்கு மட்டும்தான் அங்கே இடம் இருந்தது. அப்போது மீதமிருந்த துறைகளுக்கு என்ன செய்வது? எனவே, அவர்கள் சொல்வதே தவறான தகவல். அவர்கள் செய்தது எல்லாமே அரைகுறை, அதுபோல் இந்த கட்டிடமும் அரைகுறை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாமக்கல் கவிஞர் மாளிகையைப் பற்றி உறுப்பினர் துரைமுருகன் குறிப்பிடுகிறார். இங்கே போதிய வசதி இல்லை. அங்கே செயல்பட முடியவில்லை என்கிறார். சரி, அதற்கெல்லாம் ஈடுசெய்வதற்கு அவர்கள் வசதியாக புதிய கட்டிடத்தை கட்டி முடித்தார்களா, இல்லையே! கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கவில்லை. கட்டி முடிக்காததைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை என்றார்.

தொடர்ந்து துரைமுருகன் பேசுகையில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்குத் தாவினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா,

தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு மிக நன்றாக பராமரிக்கப்பட்டது போலவும், இப்போது எனது தலைமையிலான ஆட்சி அமைத்த பிறகுதான் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது போலவும் சில தவறான புள்ளிவிவரங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று கூறி, சில கருத்துகளை இந்த சட்டமன்றத்திலே பதிவு செய்ய முற்பட்டு இருக்கிறார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேடு பற்றியும், தற்போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவது பற்றியும், வரும் 24-ந் தேதி நடைபெற உள்ள உள்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தெளிவாக தெரியவரும் என்ற போதிலும், தற்போது இரண்டு புள்ளி விவரங்களை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.

20011-ம் ஆண்டு, முதல் இரண்டு மாதங்கள் (ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில்) அதாவது முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் 800 கன்னக்களவுகள் நடந்தன. இந்த ஆண்டு எங்கள் ஆட்சியில், அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 729 கன்னக்களவுகள்தான் நடந்துள்ளன. அதுபோல 2010-ம் ஆண்டு அதாவது தி.மு.க. ஆட்சியில் ஆதாயக் கொலை 153 நடந்துள்ளது. 2011-ம் ஆண்டு இது, 123 ஆகத்தான் இருந்தது. எனவே, தற்போது எனது தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதையும், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: