அரசியல்,முதன்மை செய்திகள் இந்தியா – இன்னும் என்ன சொல்ல போகிறாய்…

இந்தியா – இன்னும் என்ன சொல்ல போகிறாய்…

india-srilanka flag

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன எனவும், அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் இலங்கை திரும்பியுள்ளனர் எனவும், அரச புலனாய்வுச் சேவையை மேற்கோள்காட்டி இலங்கை ஊடகம் வெளியிட்ட செய்தி இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனப் புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் கொண்டே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நம்புகின்றன.

இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேவேளை, தமிழக அரசியல்கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள தூதரகம் ஊடாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளை தமிழக பொலிஸ்மா அதிபரும் இதனை மறுத்துள்ளார்.

ஆனாலும் இந்தியா மீது இலங்கை திட்டமிட்டே சுமத்தியுள்ள குற்றச்சாட்டாகவே டில்லி இதனைக் கருதுகிறது.

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்ததன் எதிரொலியாக, இந்தியா மீது பழிபோடும் வகையில் இலங்கை செயற்படுவதாக அங்குள்ள இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.

செய்தியில் அரச புலனாய்வுச் சேவை ஆதாரம் காட்டப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இலங்கை அரசே இருப்பதாக இந்தியா கருதுகிறது எனவும் புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்தியா இந்த விவகாரத்தை தனியே அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளாது என்றும், வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர், இலங்கை இந்தியா இடையிலான உறவுகளில் நெருடல் நிலை தோன்றியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி