அரசியல்,முதன்மை செய்திகள் திமுக, காங்கிரஸ் அபாயகரமான கூட்டணி – ஜெ

திமுக, காங்கிரஸ் அபாயகரமான கூட்டணி – ஜெ

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

அலைக்கற்றை இமாலய ஊழல் குறித்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன்பு சரியான பாதையில் செல்வதுபோல் தோற்றமளித்தது. இந்த ஊழல் குறித்த கடுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தின் முன்பு நாட்டின் உயரிய தணிக்கை அமைப்பான, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் சமர்ப்பித்தார்.

இந்த இமாலய ஊழலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது குறித்து விசாரணை செய்ய மத்தியப் புலனாய்வுத் துறை ஏன் அஞ்சுகிறது என்று கேள்வி எழுப்பியது.

அதன் பின்னர், அரசியல் தரகர் நீரா ராடியா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்பட இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் 40-க்கும் மேற்பட்ட இடங்களை சி.பி.ஐ. ஒரே நாளில் சோதனை செய்து ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கண்காணிக்கிறது என்பதால் இதில் சம்பந்தப்பட்டவர்களை மத்திய புலனாய்வுத் துறை விரைவில் கைது செய்யும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற பொதுவான கருத்து நிலவியது.

இந்நிலையில், 2.1.2011 அன்று பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்திருந்தார். இங்கு முதல்வர் கருணாநிதி – பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்புக்குப் பின், தி.மு.க. – காங்கிரஸ் உறவு உறுதியாக உள்ளது என்று கருணாநிதியும், மன்மோகன் சிங்கும் தனித்தனியாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

இதற்குப் பின் அனைத்தும் மாறின. இதற்குப் பிறகு மூன்று நாட்களுக்கு உள்ளாகவே, உச்ச நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லக்கூடிய வகையில், இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை முற்றிலும் தவறானது என்று இப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசினார்.

மேலும், ராசா மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது இந்த நாட்டிற்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்ததோடு, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சிக் காலத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்றும் கபில் சிபல் தெரிவித்தார். தன்னுடைய வழக்கறிஞர் யுக்தியைக் கொண்டு ஒட்டுமொத்த இந்திய மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார் கபில் சிபல்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடர்வது முடிவாகி விட்டது. இந்த நிலையில், ராசா அப்பழுக்கற்றவராகிவிட்டார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணை என்பது புஸ்வாணமாகிவிட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், விசாரணைகளில் கிடைத்த விவரங்கள் அனைத்தும் யாரையும் கைது செய்வதற்கு வழி வகுக்கவில்லை. 2ஜி அலைக்கற்றை இமாலய ஊழலில் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்த கணக்கு மிகவும் சரியான மற்றும் காலத்திற்கேற்ற அடிப்படையில் துல்லியமாக கணிக்கப்பட்டது என்ற இந்திய கணக்கு மற்றுத் தணிக்கைத் துறையின் கருத்து மதிக்கப்படாத ஒன்றாகிவிட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தணிக்கை அமைப்பின் அதிகாரம் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. இந்த இமாலய ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை நிராகரித்ததோடு, நாடாளுமன்றத்தின் ஒரு முழுமையான கூட்டத் தொடரையே முடக்கிவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்போ, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை மீது விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்ற பொதுக் கணக்குக் குழு முன்போ கபில்சிபல் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காமல், பத்திரிகையாளர்கள் முன்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், தன்னுடைய கூட்டணிக் கட்சியான தி.மு.க.விற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அமைப்பையும் காங்கிரஸ் நிர்மூலமாக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

எனவே, 2ஜி அலைக்கற்றை விசாரணை என்பது போபர்ஸ் விசாரணை வழியில் சென்று கொண்டிருக்கிறது என்பதும், இதை நிகழ்த்தியவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்பதும் தெளிவாகிறது.

நியாயமான, நேர்மையான சிந்தனை உடைய ஒவ்வொரு இந்தியரும் இது குறித்து வருத்தப்படுவதற்கு காரணம் இருக்கிறது. எந்த மாநிலத்திலும், எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, ஊழல் நிறைந்த ஆட்சியாக தன்னைத் தானே தி.மு.க. ஆட்சி அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது.

வஞ்சகர்கள், ரௌடிகள், குற்றவாளிகளுடன் நேசத்துடனும், நெருக்கத்துடனும் நடந்து கொள்வதை தன்னுடைய நடவடிக்கையின் மூலம் தி.மு.க. தலைமை எடுத்துக்காட்டுகிறது. அலைக்கற்றை விவகாரத்தில் சி.பி.ஐ.யால் சோதனை நடத்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை மாநில அரசிற்காக நடத்தப்படும் கலாச்சார விழாவிற்கான விளம்பரங்களில் கூட பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த நிறுவனத்தின் உரிமையளருடன் ஒரே மேடையில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றில் தன் பெயரை கெடுத்துக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அலைக்கற்றை ஊழலிலும் தன்னை சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. கொள்ளையடித்த இந்த அனைத்து ஊழல் பணத்தையும் தன்வசம் வைத்துக் கொண்டு, இந்த அபாயகரமான கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களை தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறது. தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்ற கிரிமினல் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தக்கப் பாடம் புகட்டுவது தமிழக மக்களின் கடமை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.