அரசியல்,முதன்மை செய்திகள் சீமான் குடைச்சல் தாங்காமல் ராகுல் காந்திக்கு ஆப்பு…

சீமான் குடைச்சல் தாங்காமல் ராகுல் காந்திக்கு ஆப்பு…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.

சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய இடங்களில் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

இந் நிலையில் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சியை தனது மண்டபத்தில் நடத்த சென்னை பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படியே பல்கலைக்கழகம் இந்த அதிரடி முடிவை எடுத்ததாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஆரம்பமாகிவிட்டதாகத் தெரிகிறது.

ராகுல்காந்தியின் அரசியல் நிகழ்ச்சிக்கு சென்னைப் பல்கலைக் கழக அரங்கத்தை ஒதுக்கினால் வழக்குத் தொடருவோம் என இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் சமீபத்தில் எச்சரித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து உரையாட ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் புறநகரான வானகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு இந்த நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை அரசியல்ரீதியிலானது என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். எல்டிடியின் அச்சுறுத்தல் உள்ள ராகுல் காந்திக்கு சென்னையின் மத்தியப் பகுதியில் உள்ள இந்த பல்கலைக்கழக மண்டபம், பாதுகாப்பானது என்று கருப்புப் பூனைப் படையினரும் கருதினர். ஆனால், ராகுலின் நிகழ்ச்சி அரசியல்ரீதியிலானது என்று கூறி அனுமதி தர பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. இதன் பின்னணியில் ‘அரசியல்’ உள்ளது என்றார்.

வழக்கமாக சென்னை வரும்போதெல்லாம் தனது கூட்டணியின் முக்கிய கட்சியான திமுகவின் தலைவரும் முதல்வருமான கருணாநிதியை சந்திப்பதை ராகுல் திட்டமிட்டு தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ராகுலின் இப்போதைய பயணத் திட்டத்திலும் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை.

மேலும் திமுகவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வரும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ராகுலின் முழு ஆதரவு உள்ளது. இது தவிர திமுகவுடன் மோதலில் உள்ள சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ராகுலின் ஆசிர்வாதம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா வீட்டில் நடந்த ரெய்டுக்கும் காங்கிரசின் முக்கியத் தலைவரான ராகுலின் ஆதரவு இருப்பதாக திமுக கருதுகிறது. அதிமுக-தேமுதிக-காங்கிரஸ் கூட்டணிக்கு ராகுல் தயாராகி வருவதாகக் கருதப்படுகிறது.

இந் நிலையில் தான் அவரது நிகழ்ச்சிக்கு மண்டபத்தை தர பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. இதன்மூலம் திமுக-காங்கிரஸ் இடையே இதுவரை நடந்து வந்த பனிப்போர் முதல் முறையாக வெட்டவெளிச்சமாகியுள்ளது.

தமிழகம் வரும் ராகுல் காந்தி நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல், கட்சி வளர்ச்சி, கூட்டணி ஆகியவை குறித்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் விவாதிக்கவுள்ளார்.

இன்று காலை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் கலந்துரையாடுகிறார்.

பின்னர் ஹோட்டல் தாஜ் கன்னிமாராவில் சென்னையிலுள்ள சில விஐபிக்களை சந்தித்துப் பேசுகிறார். அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் செல்லும் அவர் அங்குள்ள ஜெயம் மஹாலில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளைத் தனியாக சந்திக்கிறார்.

அங்கிருந்து மதுரை செல்லும் அவர் காந்தி மியூசியத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகிறார். இரவு மதுரையில் தங்கும் அவர் வியாழக்கிழமை காலை திருநெல்வேலி சென்று ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் செல்லும் அவர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளின் நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

அங்கிருந்து திருச்சி செல்லும் அவர் சத்திரம் பேருந்தி நிலையம் அருகில் உள்ள இந்திரா காந்தி பெண்கள் கல்லூரியில் இளைஞர் காங்கிரஸ் பெண் நிர்வாகிகளையும், பின்னர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளின் நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து அவர் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி