அரசியல்,முதன்மை செய்திகள் பிரதமருக்கு கடிதம் எழுதி எழுதி பிரச்சனையை ஊத்தி மூடும் கருணாநிதி – சீமான்

பிரதமருக்கு கடிதம் எழுதி எழுதி பிரச்சனையை ஊத்தி மூடும் கருணாநிதி – சீமான்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது என்றும்,

மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வில் முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.பி.பி.எஸ், எம்.டி, பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை, மருத்துவப் படிப்புக்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் பல்வேறு இன்னல்கள் நமக்கு ஏற்படும். பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது மாநிலங்களின் உரிமையில் தலையிடும் செயலாகும். மேலும் நாம் போராடிப் பெற்ற 69 சதவீத இடஒதுக்கீடு பறிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

நமது மாணவர்கள் அனைத்து வசதி வாய்ப்புக்களுடனும் படித்து வெளிவரும் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகர மாணவர்களுடன் போட்டி போட முடியாமல் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பினை இழப்பர்.

இனி மருத்துவக் கல்வி என்பதே நம் மாணவர்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிடும். ஆனால் இதைத் தடுக்க வேண்டிய தமிழக முதல்வரோ அதைத் தடுக்காமல் வழக்கம் போல தான் பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அறிக்கை வெளியிட்டதையும் தெரிவித்து அதனையும் ஒரு நீண்ட அறிக்கையாக வெளியிட்டு தன் கடமையை முடித்து விட்டார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கருணாநிதி இந்தப் பிரச்சனையிலும் இரட்டை வேடம் போடுகிறார். இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவு தமக்கு சம்பந்தம் இல்லாதது என்பது போல அறிக்கை வெளியிடுகிறார். மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது.

பெட்ரோல் விலை உயர்வில் இருந்து நெய்வேலி பிரச்சனை வரை அனைத்திலும் இதுதான் நிலை.

தனக்கும் தன் குடும்பத்துக்கும் வேண்டிய செல்வம் கொழிக்கும் இலாகாக்களைப் பெற மத்திய அரசை பிளாக்மெயில் செய்து தள்ளாத வயதிலும் குடும்பத்துடன் விமானம் ஏறிச்சென்ற கருணாநிதி பல்லாயிரக்கணக்கான எம் தமிழ் மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனையில் கடிதம் எழுதியதோடு கடமையை முடித்து விட்டது என்ன நியாயம்?.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை மாற்றும் வல்லமை அவருக்கு ஏன் இல்லை?. மாற்றும் வல்லமை இல்லை என்றால் இதற்கு காரணமான சுகாதார அமைச்சரையும், பிரதமரையும் கண்டிக்கத் துப்பில்லையா?.

கருணாநிதி இளைஞன் படத்துக்கு வசனம் எழுதும் இடைவெளியில், ஸ்பெக்ட்ரம் ஊழலால் தனக்கு ஏற்பட்ட கறையை எப்படிப் போக்குவது என கவலைப்படுவதற்கு இடையில் மாணவர்களின் பிரச்சனைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான எம் தமிழ் மாணவர்களின் பிரச்சனையில் கவனம் செலுத்தி பொது நுழைவுத் தேர்வு முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும் இல்லையெனில் மாணவர் சக்தி அவருக்கு தக்க பாடம் புகட்டும் என்று கூறியுள்ளார் சீமான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி