திரையுலகம் சசிகுமாரின் ஈசன் – விமர்சனம்

சசிகுமாரின் ஈசன் – விமர்சனம்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

வெள்ளந்தியான கிராமத்து பின்னணி கொண்ட மனிதர்களுக்குள்ளும் கொடூர குற்றங்களும், நம்பிக்கை துரோகங்களும் எட்டிப் பார்ப்பதை சுப்பிரமணியபுரத்தில் காட்டிய சசிகுமார், இம்முறை சதா சர்வகாலமும் குற்றங்களுக்கான வாய்ப்பு தேடும் நகரத்து மனிதர்களை மையப்படுத்தி ஒரு படத்தைத் தந்திருக்கிறார். அதுதான் ஈசன்.

கதை என்று பார்த்தால் ஒரு சராசரி பழிவாங்கல் சமாச்சாரம்தான். ஆனால் அதை சசிகுமார் சொல்லியிருக்கும் விதம் மனசை வலிக்க வைக்கிறது.

அன்றாடம் செய்திகளில் பார்க்கும் இந்த நகரத்துக் குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் அதிகபட்ச ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார் சசிகுமார். இது நிச்சயம் ஒரு மேம்போக்கான படமல்ல… சென்னை மாநகர போலீசாருக்கு சசிகுமார் கொடுத்திருக்கும் ஒரு குற்ற விவரணம்!

மாநிலத்தையே கைக்குள் வைத்திருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கும் வர்த்தக சாம்ராஜ்யத்தை வளைத்துப் போட்டிருக்கும் தொழிலதிபருக்குமான மோதலாகத் துவங்கும் கதை, மெல்ல மெல்ல நகரத்து நாகரீக சீர்கேட்டில் ஒரு ஊமைப் பூவின் வாழ்க்கை சிதைந்து… அதன் தொடர்ச்சியாய் அந்த குடும்பமே மார்ச்சுவரிக்குள் அடைக்கலமாவதை காட்சிப்படுத்துகிறது.

எதிர்ப்பார்க்கப்பட்ட க்ளைமாக்ஸ்தான் என்றாலும், இந்தக் கதையை அப்படியொரு க்ளைமாக்ஸுக்கு நகர்த்திப் போகும் அந்த இளைஞனை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.

இந்தப் படத்தின் ஹீரோ என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நகரத்தின் வெவ்வேறு சூழலைச் சேர்ந்த மனிதர்கள். குற்றங்களில் சிலருக்கு சம பங்கு என்றால், அந்தக் குற்றங்களை வேறு வழியின்றி ஜீரணிக்க வேண்டிய அதிகாரிகளுக்கும் சம பங்கு வந்து விழுகிறது.

துணைக் கமிஷனர் சங்கய்யாவாக வரும் சமுத்திரக்கனி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நடையிலும் குற்றவாளிகளை அணுகும் முறையிலும் நம்ம சைலேந்திரபாபுவைப் பார்ப்பது போல அத்தனை நிஜமான நடிப்பு. அவரது குரல் பெரிய ப்ளஸ்.

அரசியல் தலைவராக வரும் ஏ எல் அழகப்பனும் ஒரு முன்னாள் அரசியல்வாதி என்பதால், ரொம்ப காஷுவலாக அந்தப் பாத்திரத்தைச் செய்திருக்கிறார். இனி நிறைய படங்களில் இந்த அழகப்ப வில்லனைப் பார்க்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு செல்போன்களில் அரசியல் அதிகாரம் படைத்த தலைவராகவும், பாசமிக்க தந்தையாகவும் மாறி மாறி அவர் பேசும் காட்சி ஒன்று போதும், அழகப்பனின் இயல்பான நடிப்புக்கு.

வாய் பேச முடியாத பெண்ணாக வரும் அபிநயா அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். அதிகாரமும் பணபலமும் கொண்ட அரக்க இளைஞர்கள், வாய்ப்பு கிடைக்கும் போது தங்கள் வக்கிரத்தை அரங்கேற்ற எந்த வழியையும் கையாளத் தயங்குவதே இல்லை என்பதற்கு, அபிநயா சிதைக்கப்படும் காட்சி ஒரு உதாரணம்.

அபிநயாவின் தம்பியாக வரும் துஷ்யந்த் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த கேரக்டரைப் பார்க்கும்போது மனதில் எழும் வெறுப்பு… போகப் போக அனுதாபமாக மாறுவது, சசிகுமாரின் நேர்த்தியான உருவாக்கத்துக்கு கிடைத்த வெற்றி.

கமிஷனராக வரும் காஜா மொய்தீன் சிறப்பாக நடித்திருக்கிறார். சமுத்திரக் கனியிடம் ஒரு இடத்தில் இப்படிச் சொல்வார்:

‘காலம் பூரா விரைப்பா இருந்தா காயடிச்சிருவாங்க… கடைசி 5 வருஷம் உன் நேர்மையைக் காட்டு. போதும்’

-இந்தக் காட்சியில் அரசியல் வர்க்கத்தை அதிகாரிகள் வர்க்கம் எப்படி அனுசரித்துப் போகவேண்டும் என்பதற்கு புதிய இலக்கணமே எழுதியிருக்கிறார் இயக்குநர் .

அதேபோல, ‘நாங்கள் ரொம்ப ஆசாரமாக்கும்’ என்று ஒருவன் சொல்லும் போது, ‘முதல்ல சாக்ஸை துவைச்சுப் போடு’, என்ற சசிகுமாரின் நக்கல் ரசிக்க வைத்தது. அந்த ஆசார புருஷனின் ஆசார மனைவி ஆபீஸ் போனதும் எப்படி ஆசாரத்தை அவிழ்த்தெறிந்து நிறம் மாறுகிறார் என்பதையும் வெகு இயல்பாய் காட்டியிருக்கிறார்.

குற்றங்களின் பிறப்பிடமான நகரத்தின் இரவு வாழ்க்கையை இத்தனை ஆணித்தரமாக யாரும் படமாக்கியதில்லை.

கதிரின் கேமரா அவருக்கு உற்ற துணையாய் கைகொடுத்திருக்கிறது.

மைனஸ்கள்…? அவை நிறையவே இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆயாசம் தரும் நீளம். அந்த கிராமத்து ப்ளாஷ்பேக் சிறப்பாக இருந்தாலும், இன்னும் சற்று குறைவாக இருந்திருக்கலாம். அதே போல நகரத்தின் விசாரணைக் காட்சிகள்.

அடுத்து, குற்றத்தின் வக்கிரத்தைப் புரிய வைப்பதற்காக, அவற்றை இத்தனை கோரமாக, வன்முறையுடன் காட்ட வேண்டுமா ? அதே நேரம், இப்படிக் காட்டாவிட்டால், அதன் தாக்கம் எப்படி பார்வையாளனுக்குள் போகும் என்ற எதிர்க் கேள்வியையும் புறந்தள்ள முடியாது.

நகைச்சுவை, இதமான காட்சிகள் என பொழுதுபோக்கு சமாச்சாரங்கள் சுத்தமாகவே இல்லை. மூன்றுமணிநேரம் படத்தில் பார்வையாளர்களை உட்காரவிடாமல் தடுப்பது இதுதான்.

முக்கியமான அடுத்த குறை இசை. பாடல்கள், பின்னணி இசை எதுவுமே படத்துக்கு ஒட்டவில்லை. சொல்லப்போனால், சசிகுமாரின் முயற்சிக்கு பெரும் வேகத் தடையாக இருக்கின்றன.

இத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், ஈசன் ஒரு வழக்கமான படமல்ல என்பதைச் சொல்லியாக வேண்டும்.

இந்தப் படம் மீண்டும் மீண்டும் பார்க்கிற ரகமாக இல்லாமல் இருக்கலாம்… ஆனால் கட்டாயம் ஒரு முறை பார்த்தாக வேண்டிய படம் என்பதில் சந்தேகமில்லை. சசிகுமார் போன்ற படைப்பாளிகள் தங்கள் வித்யாசமான முயற்சியைத் தொடர ஈசன் வெல்வது அவசியம்!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி