அரசியல் அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து ஆப்பு அடிக்கும் விக்கிலீக்ஸ்

அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து ஆப்பு அடிக்கும் விக்கிலீக்ஸ்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

“இது, அமெரிக்காவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல; சர்வதேச சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்’ என்று “விக்கிலீக்ஸ்’ வெளியீட்டுக்கு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதன் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மீது, அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வெளியிட சதி செய்ததாக வழக்கு பதிவு செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.

அமெரிக்கா தன் நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கை குறித்த ரகசிய ஆவணங்களை, “விக்கிலீக்ஸ்’ இணையதளம் வெளியிட்டது. மொத்தம் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிடுவது, அமெரிக்க சட்டப்படி குற்றம் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தும், “விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச், திட்டமிட்டபடி அவற்றை வெளியிட்டார். உலக நாடுகளின் தலைவர்களுக்கு மோசமான பட்டப் பெயர் சூட்டியது, அவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளை கண்காணித்தது என அமெரிக்காவில் பல்வேறு “தில்லாலங்கடி’ வேலைகள் இந்த ரகசிய ஆவணங்கள் மூலம் உலக மக்களின் பார்வைக்கு வந்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருப்பதாவது: இது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நலன்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல. கூட்டணி மற்றும் நட்பு நாடுகள் அடங்கிய சர்வதேச சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட பயங்கரமான தாக்குதல். உலகத்தின் வளமான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பேச்சு வார்த்தைகள், உரையாடல்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். தவறான அரசியல் போக்குகள், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. ஆனால், அவற்றில் இருந்து இது வேறுபட்டது. தேசிய பாதுகாப்பு மற்றும் உலக நலனுக்காக இது போன்ற பேச்சு வார்த்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என நம்பிக்கையுள்ள மக்கள் புரிந்து கொள்வர். அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தனது நாடு மற்றும் மக்கள் பற்றி பேசுவதை வெளிப்படையாக வைக்கவே முயல்கின்றன. இதுகுறித்து பல்வேறு நாடுகளின் அதிகாரிகளுடன் பேசிய போது, இப்பிரச்னையை எதிர்கொள்வதில் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இது போன்ற நடைமுறை, பொது நலனுக்கு உகந்ததுமல்ல; ஆரோக்கியமான முறையுமல்ல. இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கச் சட்டப்படி, ஜூலியன் மீது சதி செய்து அரசு ரகசியங்களை வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்ய முடியுமா என அமெரிக்க அரசு ஆலோசித்து வருகிறது. ஜூலியனிடம் யார் யார் ஆவணங்களைக் கொடுத்தனர், எந்த அமைப்புகளுக்கு “விக்கிலீக்சோடு’ தொடர்பிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.,) விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

புஷ், சாரா பாலின் கண்டனம்: “இந்த ரகசிய ஆவணங்களின் வெளியீடு, மிகவும் அபாயகரமானது. இதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டுத் தலைவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது என்பது இனிமேல் மிகவும் கடினம்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒபாமா நிர்வாகத்தால் இதை ஏன் தடுக்க இயலவில்லை? என்ன முயற்சி எடுக்கப்பட்டது? “விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன், இதேபோல், அல்- குவைதா மற்றும் தலிபான்களின் விஷயத்திலும் ஏன் செய்யக்கூடாது?’ என்று அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சாரா பாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவுக்கு மிரட்டல்: அமெரிக்க வெளியுறவு தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, “விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச், 2011ம் ஆண்டின் துவக்கத்தில், அமெரிக்காவின் முக்கிய வங்கி தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால், அமெரிக்கா மேலும் எரிச்சல் அடைந்துள்ளது.

“விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் இதுகுறித்து “போர்ப்ஸ்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் மிக முக்கியமான வங்கி பற்றிய ரகசிய ஆவணங்கள், அடுத்தாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட உள்ளன. அவை, ஈராக் ஆவணங்கள் போல லட்சக்கணக்கில் இல்லாவிட்டாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதன் மூலம் ஊழலின் எதிரொலியை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளலாம். வங்கி உயரதிகாரிகளும் தங்கள் சுயலாபத்துக்காக எப்படி செயல்படுகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதை, “மெகா லீக்’ என்று சொல்லலாம். இவ்வாறு ஜூலியன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி