அரசியல்,முதன்மை செய்திகள் நாடாளுமன்றத்தை முடக்குவோம்

நாடாளுமன்றத்தை முடக்குவோம்

CPMandBJP

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை நாடாளுமன்றத்தை இயங்க விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளன. இதனால் நாளை கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் மீண்டும் அமளி ஏற்படும் எனத் தெரிகிறது. இன்று பக்ரீத் என்பதால் நாடாளுமன்றம் இயங்கவில்லை. குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல் ஒரு நாள் கூட அலுவல் முறையாக நடக்கவில்லை. கூட்டத்தை அமைதியாக நடத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நேரடியாக பிரதமரை கண்டித்து விட்டது சுப்ரீம் கோர்ட். இத்தனை காலமாக ஏன் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலவற்றவராக பிரதமர் இருந்தார் என்றும் அது கேட்டுள்ளது.

இது தற்போது எதிர்க்கட்சிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. இதை முன்வைத்து ஜேபிசி விசாரணை தேவை என்ற குரலை பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன எதிர்க்கட்சிகள். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் உள்ளன. அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை (ஜேபிசி தேவை என்பதை) ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை அரசு செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை விட மாட்டோம்.

அரசு இதை உணர்ந்து, நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்காமல் ஜேபிசி விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றார். ராஜ்யசபா அதிமுக தலைவர் டாக்டர் மைத்ரேயன், சிவசேனா தலைவர் சஞ்சய் ராத் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். மைத்ரேயன் கூறுகையில், இதுதொடர்பாக பிரதமர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை பிரதமர் பதில் அளிக்கத் தவறினால் லோக்சபாவையும், ராஜ்யசபாவையும் முடக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி