அரசியல்,முதன்மை செய்திகள் தமிழகத்தை திமுக நாசமாக்கிக் கொண்டிருக்கிறது

தமிழகத்தை திமுக நாசமாக்கிக் கொண்டிருக்கிறது

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின் மூலம் தமிழகத்தை நாசமாக்கிக் கொண்டிருப்பதை மக்கள் மறக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, வளம் கொழிக்கும் இலாகா பறிபோய் விட்டதே என்ற ஆத்திரத்தில், நிதானம் இழந்து, ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருக்கிறார். விரக்தியின் விளிம்பிற்கு சென்றுவிட்டதை தன்னுடைய அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், அனுமானத்தின் அடிப்படையிலே இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அறிக்கையிலே குறிப்பிடப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அனுமானத்தில் சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுத முற்படுவது முறை தானா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இழப்பின் மதிப்பு தான் அனுமானம் என்பதையும், இழப்பு அனுமானம் அல்ல என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி இழப்பு என்பது, 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக இருக்கலாம் அல்லது இரண்டு லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம். ஆனால் இழப்பே ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது. இழப்பு நிச்சயம் ஏற்பட்டு இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ. 10,000 கோடி மட்டுமே.

ஆனால்,3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ. ஒரு லட்சம் கோடி மேல். எனவே, லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது என்பது அனுமானத்தின் அடிப்படையில் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அடுத்தபடியாக எனது ஆட்சிக் காலத்தில் தணிக்கை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளுக்காக நான் அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேனா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மீதான குறைபாடுகளை தணிக்கைத் துறை சுட்டிக்காட்டுவது என்பது வழக்கமான ஒன்று. கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலும் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அண்மையில் கூட டிஎல்எப் நிறுவனத்திற்கு 26 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டதில் மாநில அரசுக்கு ரூ. 148 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்காக கருணாநிதி ராஜினாமா செய்தாரா?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலைப் பொறுத்த வரையில், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவை கடுமையாக சாடியிருக்கிறது இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை. 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? Empowered Group of Ministers என்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சரின் கோரிக்கை ஏன் புறக்கணிக்கப்பட்டது? வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக கடைசி தேதி ஏன் முன் தேதியிடப்பட்டது? தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு 85 உரிமங்கள் வழங்கப்பட்டது எப்படி? கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையை கடைபிடித்ததன் நோக்கம் என்ன? அந்தக் கொள்கையும் சரியாக கடைபிடிக்கப்படாததன் காரணம் என்ன? என தணிக்கை அறிக்கையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ராசாவின் மீது தனிப்பட்ட முறையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளே தவிர, மத்திய அரசின் மீது பொதுவாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல. அதனால் தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. இவற்றை எல்லாம் சரியாக படித்து புரிந்து கொள்ளாமல், மக்களை திசை திருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அடுத்தபடியாக, “வெறும் கருத்தியலான இழப்பை பெரிதுப்படுத்திக் காட்டுவதும், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்குவதும் சற்றும் முறையல்ல” என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

தமிழக அரசின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட ரூ. 60,000 கோடி. மூன்று ஆண்டு தமிழக அரசின் வருவாய் கருணாநிதிக்கு சாதாரண விஷயமாகிவிட்டது. கருணாநிதிக்கு ரூ. 1,76,379 கோடி என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கோ திருப்பி விடப்பட்டு இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின் மூலம் தமிழகத்தை நாசமாக்கிக் கொண்டிருப்பதை மக்கள் மறக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி