அரசியல்,முதன்மை செய்திகள் தைரியமும் வீர்யமும் கொண்ட தலைவர் சீமான்

தைரியமும் வீர்யமும் கொண்ட தலைவர் சீமான்

seeman

தைரியமும் வீர்யமும் கொண்ட தலைவராக சீமானை மாற்றியிருக்கிறது சிறை. எதிர்காலத்தில் அவர் அனலைக் கிளப்புவார், என்று கூறியுள்ளார் இயக்குநர் அமீர்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது சிங்கள கடற்படை. ஆனால் ஆதரவளிக்க வேண்டிய மத்திய அரசோ, எல்லை தாண்டிப் போனால் அப்படித்தான் அடிப்பார்கள், தவறு தமிழர் பக்கம்தான், என்று பகிரங்கமாகவே கூறிவிட்டது.

கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால், இன்று மீன் பிடி உரிமைகளையும் இழந்து தவிக்கும் தமிழ் மீனவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர் நாம் தமிழர் தலைவர் சீமான்.

”எங்கள் மீனவனை அடித்தால், இங்குள்ள சிங்கள மாணவனை அடிப்போம்!” என அவர் சீமான் முழங்கினார். இது அரசியல் சாசனத்தை மீறிய பேச்சு என்று கூறி தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தமிழக அரசு.

அரசியல் அரங்கில் சீமானின் சிறைவாசம் மறக்கடிக்கப்பட்டாலும், திரைத் துறையில் உள்ள சிலர் இன்னும் சீமானுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி இயக்குநர்கள் சுந்தர்ராஜன், அமீர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ‘சந்தனக்காடு’ கௌதமன் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் வேலூருக்குப் போய் சிறையில் சீமானை சந்தித்துப் பேசினர்.

இவர்களில் இயக்குநர் அமீர் சமீபத்தில் ஜூனியர் விகடனுக்கு சீமான் சிறைவாசம் குறித்து அளித்துள்ள பேட்டி:

”எப்படி இருக்கிறார் சீமான்?”

”சீமானை சிறையில் பார்த்ததுமே நான் கேட்டது, ‘சிறையில் இருப்பது நீங்களா… இல்லை நானா?’ என்றுதான். தலை வாராத முடியோடும், தாடியோடும் இருந்த என்னைப் பார்க்கையில்தான் சிறையில் இருப்பது போல் இருந்தது. மழுமழு ஷேவ் செய்து செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

சொகுசாக இருக்கிறார் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. சிறை அவரை எந்த வகையிலும் சிதைக்கவில்லை. ஆனால், உடம்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது. ‘உள்ளே அதிக நேரம் கிடைக்கிறதால் உடற்பயிற்சிகள் நிறைய பண்றேன். அதான் உடம்பு இன்னமும் இறுகிடிச்சு..!’ என்றார். அவர் முகத்தில் கவலையே தெரியவில்லை. வழக்கமான களையும், சிரிப்பும் அப்படியே இருக்கிறது!”

”ஈழ விவகாரம் குறித்து ராமேஸ்வரத்தில் பேசியதற்காக நீங்களும் சீமானும் மதுரை சிறையில் ஒன்றாக இருந்தீர்கள். இப்போது வேலூர் சிறையில் அவரைத் தனியாகப் பார்த்தபோது உங்கள் மனநிலை?”

”கண்ணெதிரே ஈழ மண்ணையும் மக்களையும் வாரிக்கொடுத்துவிட்டு, அது பற்றிய கவலையே இல்லாமல் அடுத்த கட்ட வேலையில் தீவிரமாகிவிட்டவர்கள் நாம். ராமேஸ்வரத்தில் ரத்தம் முறுக்கேறப் பேசிய நான், இன்றைக்கு ஜெயம் ரவியையும் நீது சந்திராவையும் வைத்துப் படம் பண்ண வந்துவிட்டேன்.

சீமான் அப்படி இல்லை. ராமேஸ்வரத்தில் பேசியபோது இருந்த உணர்வும் வேகமும் வேலூர் சிறைக்குள்ளும் இருக்கிறது. கடைசிவரை போராடும் நியாயமான மூர்க்கம் அவரிடம் இருக்கிறது. ஒரு அரசியல் தலைவராக உருவெடுக்கும் தைரியமும் வீரியமும் அவரிடம் இருக்கிறது. வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவனாக, அவரைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டது உண்மை!”

”இத்தனை மாத சிறை வாழ்க்கை சீமானின் பொது வாழ்க்கைப் பார்வையை எந்த வகையிலேனும் மாற்றி இருக்கிறதா?”

”கிடையவே கிடையாது… சிறை வாழ்க்கை சீமானை முழு நேர அரசியல்வாதியாக மாற்றி விட்டது என்பதுதான் உண்மை! ஈழப் பிரச்னை, அரசியல், அன்றாட நிகழ்வுகள் என்றுதான் சீமானால் இனி இயங்க முடியும். சிறை வாழ்க்கை மட்டுமல்ல… இனி எத்தகைய நடவடிக்கையாலுமே அவரைச் சிதைக்க முடியாது.

சிறையில் இருந்து வெளியே வந்த உடன் அவருக்கு நடிக்கவோ, இயக்கவோ நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை. வரிந்துகட்டி களம் இறங்கும் அரசியல்வாதியாக சிறை அவரை வார்த்துவிட்டது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அவருக்கு இருக்கிறதோ இல்லையோ… ஆனால், வரும் காலத்தில் அனல் கிளப்பும் ஆயுதமாக அவர் மாறுவார்!”

”சக கலைஞனாக நினைத்துக்கூட சினிமா சமூகத்தினர் அவருக்குத் துணையாக நிற்கவில்லையே… அறிவிக்கப்படாத சில அரசியல் மிரட்டல்கள்தான் இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறதே?”

”சீமானை சந்திக்க விரும்பாதவர்கள் பரப்பிவிடும் கருத்து இது. அவரைப் பார்க்கச் சொல்லி யாரும் வற்புறுத்தவும் இல்லை. பார்க்கக்கூடாது என யாரும் மிரட்டவும் இல்லை. அவரைப் பார்த்துவிட்டு வந்ததால் என்னையும் சத்யராஜையும் இனி தள்ளி வைத்துவிடுவார்களா? அவரைச் சந்திப்பவர்கள் யார் யார் என்பதை கண்காணித்து மிரட்டுவதுதான் அரசாள்வோருக்கு வேலையா?

இந்த விஷயத்தில் சீமானும் மிகுந்த தெளிவோடு இருக்கிறார். யாரும் தன்னை வந்து சந்திக்கவில்லையே என்கிற எதிர்பார்ப்போ வருத்தமோ அவருக்கு இல்லை. திரைத் துறையினர் அவரைப் பார்க்கத்தான் வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஆனால், அதற்காக மிரட்டல், உருட்டல் என அரசு மீது பழிபோட்டு அவரைப் பார்க்காமல் இருப்பதற்கு காரணம் கற்பிப்பது தவறு!

உண்மையில் சொல்வதானால், சீமான் சிங்கள மாணவர்கள் குறித்து என்ன பேசினார் என்பதே இங்கே பலருக்கும் தெரியவில்லை. அப்படியிருக்க, அந்தப் பேச்சு இறையாண்மை மீறலா… அரசியல் சட்ட மீறலா என்பதெல்லாம் அவர்களுக்கு எப்படித் தெரியும்?”

”அவரை வெளியே கொண்டுவரும் முயற்சியில் திரைத்துறையினர் இறங்காதது நியாயமா?”

”இன்றைக்கு விஜயகாந்த்துக்கு ஒரு பிரச்னை வந்தால், அவருக்குப் பின்னால் நடிகர் சங்கமா வந்து நிற்கும்?

அதேபோல்தான் சீமான் விவகாரமும். அவர் சினிமா இயக்குநர்களில் ஒருவர்தான். ஆனால், இன்றைக்கு அவர் ஒரு இயக்கத்தின் தலைவர். எதற்கும் அவர் பின்னால் நிற்பதற்கு ஒரு இயக்கம் இருக்கிறது. இத்தனை நாளை நெஞ்சுறுதியோடு கடந்துவிட்ட அவரை சினிமா சமூகத்தினர் போராடி வெளியே கொண்டுவர வேண்டியது இல்லை. அவரும் அதை எதிர்பார்க்கவில்லை!’

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி