அரசியல் ராகுல் காந்தியை கங்கையில் தூக்கியெறிய வேண்டும்

ராகுல் காந்தியை கங்கையில் தூக்கியெறிய வேண்டும்

sarathyadav

ராகுல் காந்திக்கு என்ன தெரியும். யாரோ எழுதிக் கொடுத்ததை மேடைகளில் வாசிக்கிறார். அவரை கங்கையில் தூக்கியெறிய வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் ஆவேசமாகக் கூறினார்.

பீகாரில் மூன்றாவது கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேசிய தலைவர்கள் அந்த மாநிலத்தில் முகாமிட்டு காரசாரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பாளரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான சரத் யாதவ் பதுவா தொகுதியில் நடந்த பிரசாரத்தில் பேசுகையில், மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி இப்போது இந்த சிறுவன் (ராகுல்) என பரம்பரை பரம்பரையாக அதிகாரத்தை அனுபவித்து வருகின்றனர். 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகின்றனர். அவர்களின் கையில் (சின்னத்தில்) சிக்கிக் கொண்டு மக்கள் அவதிப் படுகின்றனர் என்றார் சரத் யாதவ்.

ராகுல் காந்தியை பாவனை செய்வதுபோல் சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு அவரைப்போன்று பேசிக் காட்டினார் சரத். உனக்கு என்ன தெரியும். யாரோ எழுதிக் கொடுத்ததை மேடையில் வாசித்துக் கொண்டிருக்கின்றாய். உன்னை கங்கை நதியில் தூக்கியெறிய வேண்டும். மக்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என்றார் அவர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வைத்து மக்கள் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் 2015-ல் பிகாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம் என்றார் அவர்.

ராகுல் மீதும் நேரு குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாகப் பேசிய சரத் யாதவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் பிரசாரக் கூட்டங்களில் கூடும், பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்து கலக்கமடைந்ததால்தான் சரத் யாதவ் இவ்வாறு பேசி வருகிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறினார்.

மேலும் ராகுல் காந்தி பற்றி பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் கூறிய கருத்துக்கு பதில் கூற அகமது மறுத்துவிட்டார். அரசியலில் எனது மகன் தேஜஸ்வி, ராகுல் காந்தியைப் பின்னுக்குத் தள்ளிவிடுவான் என்று லாலு கூறியிருந்தார். பதில் சொல்லக் கூடிய அளவுக்கு இந்த கருத்தில் ஒன்றும் இல்லை என்றார் அகமது.

ராகுல் காந்தியையும் நேரு குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசியதை கடுமையாக கண்டிப்பதாக பிகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரேம் சந்திர மிஸ்ரா கூறினார்.

சரத் யாதவின் கருத்து அவமதிப்பானது மட்டுமல்ல கிரிமினல் குற்றமும் கூட என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி