அரசியல் போர்க்குற்றங்களை மூடிமறைக்க மூன்று மில்லியன் பவுண்டுஸ்களை வழங்கும் இலங்கை

போர்க்குற்றங்களை மூடிமறைக்க மூன்று மில்லியன் பவுண்டுஸ்களை வழங்கும் இலங்கை

Srilankan government appointed Bell Pottinger Group to cover the Warcrime

சிறிலங்கா அரசாங்கம் தொடர்பாக சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை மாற்றி, போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்காக பிரித்தானியாவின் பரப்புரை நிறுவனம் (PR firm) ஒன்றுக்கு சுமார் மூன்று மில்லியன் பவுண்ஸை சிறிலங்கா அரசாங்கம் செலுத்துவதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் மத்தியில் சிறிலங்கா தொடர்பிலான நற்பெயரை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் பிரித்தானியாவின் Bell Pottinger Group என்ற பரப்புரை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளதாக இச் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் தமது அரசாங்கத்தினதும், மக்களினதும் நலன்கள் கருதி பல பரப்புரை நிறுவனங்களை தாம் பணிக்கு அமர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள போதிலும், அந் நிறுவனங்களின் பெயர், விபரங்களை வெளியிடவில்லை.

அதேபோன்று Bell Pottinger Group என்ற பரப்புரை நிறுவனமும் இது குறித்த விபரங்களை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளது. வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் சுசர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன.

அத்துடன், உள்நாட்டில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும், மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தியிருந்தன. சிறிலங்காவின் மனிதவுரிமைகள் நிலை குறித்து கவலை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் இந் நாட்டுக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியது.

சர்வதேச சமூகத்தில் ஏற்பட்ட அவப்பெயரை மாற்றும் ஒரு நோக்குடனேயே பிரித்தானியாவின் Bell Pottinger Group என்ற பரப்புரை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு கடந்த வாரம் விஜயம் செய்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் விஜயத்தின் போதும் இக் குறிப்பிட்ட நிறுவனம் சிறிலங்காவின் சார்பில் பரப்புரைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை நியமிக்க முற்பட்ட வேளையில், அதனைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இந் நிறுவனத்தை நாடியதாகவும் தெரிய வருகின்றது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறும் நோக்குடன் இந் நிறுவனம் சிறிலங்காவின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் பரப்புரைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து  பிரித்தானியாவில் தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளை முறியடிக்கும் வகையில் இக் குறிப்பிட்ட நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் பொது நல உறவுகள் குறித்து சர்வதேச ரீதியாக இந் நிறுவனம் அதிக கவனம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பொது நல உறவுகள் குறித்து பரப்புரைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் Bell Pottinger Group என்ற பரப்புரை நிறுவனம் முன்னணியில் இருக்கின்றது. இந் நிறுவனம் சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள், அரசாங்கத் திணைக்களங்கள் சார்பில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி