அரசியல் சென்னை ஸ்தம்பித்தது…

சென்னை ஸ்தம்பித்தது…

chennaibus

டிரைவர், கண்டக்டர் மீது திமுக கவுன்சிலரின் மகனும் அவரது அடியாட்களும் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இன்று காலை முதல் நடந்து வந்த சென்னை மாநகர அரசுப் பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக் 12 மணியளவில் திரும்பப் பெறப்பட்டது.

ரவுடித்தனமாக நடந்து கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலரின் மகன் செந்தில் என்பவர் உள்பட 6 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த அதிரடி ஸ்டிரைக்கால் சென்னை நகரில் இன்று போக்குவரத்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர்.

சென்னை தியாகராய நகரில் இருந்து ஆவடிக்கு நேற்றிரவு மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்து (தடம் எண்: 147பி) சென்றது. அம்பத்தூர் எஸ்டேட் ரோட்டில் அந்த பஸ், ஒரு கார் மீது பக்கவாட்டில் உரசுவது போல் சென்றது.

அந்த காரில் அம்பத்தூர் நகராட்சி 38வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புவின் மகன் செந்தில் சுரேஷ், கவுன்சிலரின் தம்பி குட்டி இருவரும் இருந்தனர். டிரைவர் உதயகுமார் என்பவர் காரை ஓட்டினார்.

இதையடுத்து காரில் இருந்தவர்கள் பஸ்சை வழிமறித்து டிரைவருடன் வாக்குவாதம் செய்தனர். டிரைவருக்கு ஆதரவாக கண்டக்டர் சுப்பிரமணி பேசினார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

செந்தில் சுரேஷ் செல்போன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தகவல் தரவே, அங்கு வந்த கும்பல் டிரைவர் கண்டக்டரை தாக்கியதுடன் அந்த பஸ்ஸையும், பிற போக்குவரத்துக் கழக பஸ்களையும் அடித்து நொறுக்கியது. இதில் 3 பஸ்கள் சேதமடைந்தன.

அந்த பஸ்களில் இருந்த டிரைவர்களையும், கண்டக்டர்களையும் விரட்டி விரட்டித் தாக்கியுள்ளனர். ஒரு டிரைவரை கொலை செய்யவும் முயன்றுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவர், கண்டக்டர்களும் பஸ்களும் திமுக கவுன்சிலரின் அடியாட்களால் தாக்கப்பட்ட தகவல் பரவியதும் பஸ்களை நிறுத்தி டிரைவர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருமங்கலம் துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் விரைந்து வந்து டிரைவர், கண்டக்டர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்திய ரெளடிக் கும்பலை கைது செய்யாத வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து செந்தில் சுரேஷ், உதயகுமார், குட்டி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கவுன்சிலர் அன்புவையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் டிரைவர், கண்டக்டர்கள் கூறிவிட்டனர்.

விடிய விடிய பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை. இந் நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு டிரைவரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து இன்று இன்று காலை டிப்போக்களுக்கு வந்த டிரைவர்களும், கண்டக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர்.

வேலை நிறுத்தம் பற்றி தெரியாத சில டிரைவர், கண்டக்டர்கள் தான் வழக்கம் போல் பஸ்களை இயக்கினர். அவர்களையும் மற்ற தொழிலாளர்கள் நடுவழியில் மறித்து பஸ்களை இயக்க விடாமல் தடுத்தனர்.

சென்னை நகரில் உள்ள 15 டெப்போக்களைச் சேர்ந்த 1500 பஸ்கள் சுத்தமாக ஓடவில்லை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இதனால் சென்னை நகர் முழுவதும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போனது. உடைக்கப்பட்ட 3 பஸ்களையும் திருமங்கலம் பஸ் டிப்போ முன் பொதுமக்கள் பார்வைக்காக தொழிலாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

பஸ் டெப்போக்களின் கதவுகளை மூடி, யாரும் பஸ்களை இயக்கிவிடாத வகையில் தொழிலாளர்கள் முடக்கி வைத்தனர்.

இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

இயஙகிய ஒருசில பேருந்துகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் ஆயிரக்கணக்கி்ல் குவிந்திருந்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

ஆட்டோக்களுக்கும் ஷேர் ஆட்டோக்களுக்கும் பெரும் டிமாண்ட் நிலவியது. வழக்கமான ஆட்டோக்கள் கூட ஷேர் ஆட்டோக்களாக மாறி, ஏழு எட்டு பேரை ஏற்றிச் சென்றன.

ஆட்டோ கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஷேர்-ஆட்டோக்களில் ஏராளமான பயணிகள் தொங்கிக் கொண்டு பயணித்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

ஆட்டோக்களுக்கும் ஷேர் ஆட்டோக்களுக்கும் பெரும் டிமாண்ட் நிலவியறது. வழக்கமான ஆட்டோக்கள் கூட ஷேர் ஆட்டோக்களாக மாறி, ஏழு எட்டு பேரை ஏற்றிச் சென்றன.

ஆட்டோ கட்டணமும் பல மடங்கு உயர்ந்தது. ஷேர்-ஆட்டோக்களில் ஏராளமான பயணிகள் தொங்கிக் கொண்டு பயணித்தனர்.

இதற்கிடையே, பிற்பகல் 12 மணியளவில் அதிகாரிகளுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் பஸ்களை இயக்க போக்குவரத்து ஊழியர்கள் ஒப்புக் கொண்டனர்.

நிரம்பி வழிந்த மின்சார ரயில்கள்:

அரசு பஸ்கள் ஓடாததால் மின்சார ரயில்களில் கூட்டம் அலை மோதியது.

ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ரயில் நிலையங்கள் நிரம்பி வழிந்தன. டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

என்ஜின் கோளாறு: பறக்கும் ரயில் சேவையும் பாதிப்பு:

இதற்கிடையே இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில் பூங்கா நகர் ரயில் நிலையம் அருகே அந்த ரயிலின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் ரயில் நடுவழியில் நின்றது. இதையடுத்து கடற்கரை -வேளச்சேரி மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

ரயில்வே பொறியாளர்கள் விரைந்து என்ஜினில் பழுதை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியாததால் அந்த ரயிலை கடற்கரையில் இருந்து வந்த மற்றொரு ரயில் என்ஜின் இழுத்துச் சென்றது.

அதன் பிறகே கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் காலை 8.30 மணி முதல் 9.45 மணி வரை பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி