பெரும் பகுதி வன்னி மக்கள்,பிரபாகரன் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்- ஆவணப்பட இயக்குனர்

விளம்பரங்கள்

prabha

உச்சகட்ட நெருக்கடிகள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் தன் சொந்த ஊரான இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் சோமீதரன். ‘எரியும் நினைவுகள்’, ‘முல்லைத்தீவு’ போன்ற தன் படங்களின் மூலம் ஈழ மக்களின் கண்ணீரை உலக அரங்கில் காட்சிப்படுத்தியவர்.

நெருக்கடியான நிலையில் இவரின் செயல் பாட்டைக் கண்காணித்து வந்த இலங்கை அரசாங்கம் இவரை நாட்டிற்குள் அனுமதிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதை மீறிச் சென்ற சோமீதரன் அனுபவம் எப்படி இருந்தது? அவரிடம் பேசினோம்.

‘‘வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் என்று நிறைய இடங்களுக்குப் போனேன். கிழக்கு மாகாணம் முழுக்க என்னால் எந்தவித அச்சமும் இன்றி புகுந்து வர முடிந்தது. இதோடு மகிந்தாவின் சொந்த மாவட்டமான அமாந்த் தோட்டை,மாத்தரை,களீ போன்ற சிங்களப்பகுதிகளையும் முழுமையாக சுற்றிப் பார்த்தேன்.நான் பிறந்ததிலிருந்து போக முடியாமல் இருந்த பகுதிக்குக்கூட இந்த முறை பயணத்தில் போக முடிந்தது. கெடுபிடிகள் இல்லாமல் சுற்றவும் முடிந்தது.

தமிழ் மக்களைப் பொருத்த அளவில் மிகுந்த சோர்வுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.இப்போது அவர்களால் அரசியல் பேச முடியவில்லை. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் அவர்களால் எதையும் வெளிப்படையாகப் பேச தயக்கம் இருக்கிறது. அது நியாயமும் கூட.

நிறைய தமிழ் மக்கள் புலிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். வன்னிப் பகுதியில் பெரும் பகுதி பிரபாகரன் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்.ஒரு சிலர் பிரபாகரன் இறந்ததை உண்மை என்றும் பெரும் பகுதி வன்னி மக்கள் பிரபாகரன் சாகவில்லை என்றும் இப்போதும் நம்புகிறார்கள்.

ஒரு ஈழப் போராளியை நான் சந்தித்தேன். அவரிடம், திரும்ப ஆயுதப் போராட்டம் சாத்தியமா? என்றேன். அதற்கு அவர், ‘‘நாங்கள் இப்போது நோஞ்சான்களாக இருக்கிறோம்.எங்கள் உடலுக்கு முதலில் சக்தி தேவைப்படுகிறது,அதுவே கிடைக்காத போது ஆயுதம் ஏந்துவது நடக்கின்ற காரியமா? எங்களுக்கு கிளிநொச்சி வீழ்ந் தபோதே தெரியும், நாங்கள் தோல்வியை சந்தித்து, அழிவைக் காண நேரிடும் என்று. இனி ஆயுதப் போராட்டம் தழைக்கலாம். இல்லாமலும் போகலாம்.அதற்கு பதில் சொல்ல இன்னும் ஐந்து பத்து ஆண்டுகள் பிடிக்கும்’’ என்றார். இவரது மனநிலைதான் பெரும்பாலான தமிழ் மக்களின் இன்றைய மனநிலையாக உள்ளது.

பெரும்பாலான தமிழ் மக்கள் விவசாயிகள். அல்லது மீனவர்கள். இப்போது நிலம் முழுக்க ராணுவத்தின் பிடியில் இருக்கிறது. மீன் பிடித்து பிழைப்பு நடத்துவது கூட ஆகாத காரியமாக இருக்கிறது. அவர்களுக்கு இப்போது ஒரு தொழில் தேவை. பிழைக்க சாப்பாடு தேவை. சிலர் வாய்விட்டு ஒரு ரொட்டித்துண்டு வாங்கித்தர முடியுமா என்று கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்’’ என்று சொல்லும் சோமீதரனிடம் ‘‘சீனாவின் மீள் பணிகள், அபிவிருத்தி பணிகள் எப்படி இருக்கிறது?’’ என்றோம்.

‘‘இலங்கையில் பெரும் பகுதிகளில் சைனாவின் அபிவிருத்தி திட்டம் தான் வேகமாக நடந்து வருகிறது.பார்க்கும் இடம் எல்லாம் சைனாவின் கொடிகள் பறக்கின்றன. பிரபாகரன் இறந்து கிடந்ததாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நந்திக்கடல் முழுக்க சைனாவிடம் ஒப்படைத்து விட்டது இலங்கை அரசாங்கம்.மீன் உற்பத்தியை பெ ருக்கும் ஆய்வை இங்குதான் சீனா செய்து கொண்டிருக்கிறது.உயர் பாதுகாப்பு வளையம் இடப்பட்ட பகுதியாக அது உள்ளது.

முன்பெல்லாம் 500மீட்டருக்கு ஒரு இடத்தில் ராணுவ முகாம்கள் இருந்தன.இப்போது அவை 5கிலோ மீட்டருக்கு ஒன்றாக மாற்றம் அடைந்திருக்கின்றது. ஏற்கெனவே ராணுவ முகாமாக இருந்த இடங்கள் முழுக்க இப்போது புத்தர் கோயில்களாக மாற்றம் பெற்றுள்ளன. தமிழர் பகுதி முழுக்க முழுவீச்சில் சிங்களர் குடியேற்றம் நடைபெறுகிறது’’ என்று சொல்லும் சோமீதரனுக்கு இந்தியாவின் அபிவிருத்தியை விட சைனாவின் அபிவிருத்தி திட்டம்தான் மலைப்பை ஏற்படுத்தியதாம்.

‘‘சாதாரண மக்கள் எங்கேயும் நடமாடலாம். முள்வேளியில் இருந்து வெளியேற விரும்புகின்றவர்கள் வெளியேறலாம். ஆனால், மஹிந்தாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியாது. இதுதான் இப்போதைய இலங்கையின் நிலையாக இருக்கிறது.பிரதான எதிர்க்கட்சியான ரணில் கூட வாயை திறந்து பேச முடியாது. எல்லாம் பாதுகாப்பு மட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன.ஒரு மனிதனை பற்றிய அத்தனை விவரங்களையும் ஆவணப்படுத்தி விட்டது மஹிந்தா அரசு’’ என்கிறார்.

மனித உரிமை மீறல்,ஜனநாயகப் படுகொலை என்று எவ்வளவுதான் குரலை உயர்த்தினாலும் மஹிந்தா ராஜபக்ஷேவின் மணிக்கட்டிற்குள் இருக்கிறது இன்றைய இலங்கை?!.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: