அயோத்தி தீர்ப்பு-இந்தியா முழுவதும் அமைதி-ஒரு பிரச்சினையும் இல்லை

விளம்பரங்கள்

ayodhya

அயோத்தி தீர்ப்பு வெளியானால் பதட்டம் ஏற்படுமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மக்கள் வழக்கம் போல தங்களது பணிகளில் தீவிரமாக உள்ளனர். நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தவிதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

குறிப்பாக அயோத்தி நகரமும், அதையொட்டி உள்ள பைசாபாத் நகரமும் மிகவும் அமைதியாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைள் தொடருகின்றன.

அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக அயோத்தி, பைசாபாத் ஆகிய இரட்டை நகரங்களும் கடந்த சில நாட்களாக பீதியில் இருந்தன. பாதுகாப்பும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியான நேற்று அயோத்தியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. மக்கள் வழக்கம் போல தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

தீர்ப்பு வெளியாகி விட்டதைத் தொடர்ந்து இருந்த கொஞ்ச நஞ்ச பதட்டமும் சுத்தமாக அகன்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் காணப்படுகின்றனர். அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாக தத்தமது பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் இரு நகரங்களிலும் போடப்பட்டுள்ள பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படவில்லை. தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு நீடிக்கிறது.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வணிக நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படுகின்றன. ஹோட்டல்கள், கடைகள் திறக்கபப்ட்டுள்ளன.

தமிழகத்தில் மகா அமைதி:

தமிழகத்தில் பதட்டமான என கருதப்பட்ட பகுதிகளில் பெருமளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் காவல்துறையினரே ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சத்தம் கூட இல்லாத அளவுக்கு மிக மிக இயல்பான நிலையில் அனைத்தும் உள்ளன.

மசூதிகள், கோவில்களில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் என எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாக காணப்பட்டன. ஆனால் எங்குமே எந்தப் பிரச்சினையம் எழவில்லை.

இஸ்லாமியர்களும், இந்துக்களும் வழக்கம் போல தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் திருவல்லிக்கேணி மசூதி முன்பு நேற்று அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதைப் பார்த்து மசூதிக்கு வந்தவர்கள், ஏன் தேவையில்லாமல் இத்தனை பேரை குவித்து வைத்திருக்கிறார்கள் என்று கேட்டனர்.

இந்தியா முழுவதும் இதே நிலைதான். நாட்டு மக்கள் அனைவரும் இதை ஒரு பெரிய பதட்டமான விஷயமாக கருதவில்லை, இயல்பாகவே எடுத்துக் கொண்டனர் என்பதையே நாட்டுமக்கள் நேற்றும், தீர்ப்புக்குப் பின்னரும் காட்டிய அமைதியும், இயல்பான போக்கும் காட்டுவதாக போலீஸாரே நிம்மதிப் பெருமூச்சுடன் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: