அரசியல் காங்கிரஸ்-தேமுதிக-பாமக கூட்டணிக்குத் தயார்: ராமதாஸ்

காங்கிரஸ்-தேமுதிக-பாமக கூட்டணிக்குத் தயார்: ராமதாஸ்

vijayakanth

காங்கிரஸ் , விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக ஆகிய மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புக்கள் இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையி்ல்,

காங்கிரஸ் தலைமையில் தனி கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது அபிப்ராயம் மட்டுமல்ல. சில மூத்த காங்கிரஸ்காரர்களின் கருத்தும் அதுதான். காங்கிரஸ், விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும்.

என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் பேசும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தோள்களில் ஏறி தேர்தல் திருவிழாவை பார்க்கிறோம். பக்கத்து மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் கட்சியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காங்கிரஸ் முயற்சி எடுத்தால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது.

தனியாக நிற்கும் சூழல் வந்தால் அதற்கும் பாமக தயார். எங்கள் கட்சிக்கு செல்வாக்கான 100 தொகுதிகளை தேர்ந்தெடுத்து இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டோம் என்றார்.

குடிகார நாடாகும் தமிழ்நாடு :

முன்னதாக தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, இந்தியாவிலேயே தமிழ்நாடு குடிகார நாடாக மாறப் போகிறது.

பாமக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கிற்கே முதல் கையெழுத்து. ஒரு சொட்டு சாராயம் கூட தமிழத்த்தில் இருக்காது.

கேரளா, கர்நாடகா , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. முல்லை பெரியாறு, காவேரி, பாலாறு சிக்கல்கள் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படவில்லை. இதற்கு தமிழகத்தை ஆண்டவர்களும், ஆட்சி செய்துக் கொண்டிருப்பவர்களும் சிந்திக்காததே காரணம்.

5 ஆண்டு பதவியில் நீடித்தாலே போதும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பில் அரசு மெளனம் சாதித்து வருகிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி