தொழில்நுட்பம் லஞ்சத்தை ஒழித்த லஞ்சம் – மதுரையில் பரபரப்பு

லஞ்சத்தை ஒழித்த லஞ்சம் – மதுரையில் பரபரப்பு

Madurai

மதுரை மேலூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலராக பணிபுரியும் சித்தா மருத்துவர் அசோக்குமார் மதுரை கே.கே.நகரில் தனி மருத்துவமனை வைத்துள்ளார்.

மரு. அசோக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக மதுரை இலஞ்ச ஒழிப்பு காவல்பிரிவுக்கு புகார் வந்தது. இந்தப் புகார் பற்றி, இலஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில், மரு.அசோக்குமாருக்கு சாதகமாக முடிவு எடுத்து அவர் அதிகம் சொத்து சேர்க்கவில்லை என்று சான்றளிக்க, அவரிடம் ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் ரூ.12 லட்சம் இலஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆய்வாளரின் உறவினரும், பெரிய மருத்துவமனை தலைமை மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான நமச்சிவாயம் என்பவர் மூலம் அவர் தொடர்ந்து இலஞ்சம் கேட்டு வந்தாராம். இலஞ்ச ஒழிப்பு அதிகாரியே இலஞ்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த மரு.அசோக்குமார், இதுபற்றி திருச்சி இலஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் அம்பிகாபதியிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகளை பிடிக்க இலஞ்ச ஒழிப்பு காவலர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கூரியபடி, முன்பணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தருவதாக, இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியனிடம் அசோக்குமார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை இலஞ்ச ஒழிப்புத்துறையினர் மருத்துவரிடம் கொடுத்தனர்.

இந்த இலஞ்சப் பணத்தை வாங்குவதற்காக ஆய்வாளர் பாண்டியனின் சார்பில் நமச்சிவாயம் கே.கே.நகரில் உள்ள மரு. அசோக்குமாரின் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அங்கு திருச்சி இலஞ்ச ஒழிப்பு பிரிவு து.க (DSP) அம்பிகாபதி தலைமையில் படையினர் மறைந்து இருந்தனர். மரு.அசோக்குமாரிடம் நமச்சிவாயம் பணத்தை பெறும் போது இலஞ்ச ஒழிப்பு படையினர் கையும், களவுமாகப் பிடித்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அனைத்து உண்மைகளையும் நமச்சிவாயம் ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு நமச்சிவாயம் பேசியில் ஆய்வாளர் பெருமாள் பாண்டியனுடன் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிவிட்டதாக தெரிவித்தார். உடனே, பெருமாள்பாண்டியன் பணத்தை வீட்டில் வந்து கொடுக்கும் படி கூறினார்.

இதை வைத்து ஆய்வாளர் பெருமாள்பாண்டியனுக்கு இதில் தொடர்பு உள்ளதை இலஞ்ச ஒழிப்பு போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டனர். ஆனால், இலஞ்ச வேட்டை நடந்தது பற்றி எதுவும் தெரியாமல் ரேஸ்கோர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் பெருமாள்பாண்டியன், நமச்சிவாயத்திற்காக காத்துக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு நமச்சிவாயத்துடன் சென்று, ஆய்வாளர் பெருமாள்பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் நேற்று காலை வரை விசாரணை நடத்தப்பட்டது.

அதன்பிறகு பெருமாள் பாண்டியன், ஓய்வு பெற்ற மருந்தாளுநர் நமச்சிவாயம் ஆகிய இருவரையும் நேற்று காலை மதுரை நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னிலைப்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி