உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்

விளம்பரங்கள்

தமிழீழம்: உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது. எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்தின்அடையாளங்களை நாம்பேணிக் காப்பாற்ற வேண்டும். அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது. உரிமையுடன் வாழ வலுவானபோர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக புலிகள் இயக்கம் சார்பில் இராமு சுபன் என்பவர் விடுத்துள்ள அறிக்கை:

இன்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்து மூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஓர் உயரிய இலட்சியத்துக்காக தன்னையே உருக்கி ஆகுதியாக்கிய அற்புதப் போராளியை நினைவுகூரும் நாள். எடுத்துக் கொண்ட குறிக்கோளை அடைவதற்காய் உறுதியுடன் இறுதிவரை பயணித்த வீரனின் மறைவுநாள். தியாகத்தின் உச்சநிலையைத் தொட்டு தன் சாவின்மூலம் ஆதிக்க சக்திகளை வெட்கித் தலைகுனிய வைத்த தியாகச் செம்மலை எம் மனத்திலிருத்திப் பூசிக்கும் புனிதநாள்.

எமது ஈழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய பொறிக்குள் அகப்பட்டிருந்த நேரத்தில்தான் தியாகி திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. அன்னிய சக்திகள் தொடர்பில் எமது மக்களிடமும் ஏனையோரிடமும் இருந்த மாயையைத் துடைத்தழிக்க அகிம்சை முறையிலேயே தனது போராட்டத்தைக் கையாண்டார். மக்களை மாயையிலிருந்து விடுவித்து சரியான வழியில் அணிதிரள வைத்தது திலீபன் அவர்களின் போராட்டமேயாகும்.

எம்முன்னால் ஆர்ப்பரித்து நின்ற எதிரியின் நோக்கங்களையும், சூழ்ச்சித் திட்டங்களையும் அம்பலப்படுத்தும் அதேநேரம் அத்திட்டங்களைத் தவிடு பொடியாக்கி எம் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு எந்தெந்த வழிகளைப் பின்பற்றி எமது இயக்கம் போராடியது என்பதற்கு தியாக தீபம் திலீபன் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

எந்தப் பெரிய சக்திகளானாலும் எம்மால் சாத்தியமான வழிகளில் போராடுவதன் ஊடாக எம் இலட்சியப் பாதையினை மாவீரர்கள் செப்பனிட்டே சென்றுள்ளனர். அந்த வகையில் தியாக தீபம் மாவீரன் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணம் எம் இனத்தின் உறுதிக்கும், இன எழுச்சிக்கும் ஒரு படிக்கல்லாக அமைந்தது.

எமது பலம்தான் பாதுகாத்தது…

திலீபன் அவர்கள் எந்தக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இறுதிவரை நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரை உண்ணா விரதம் இருந்து தன்னுயிரைத் துறந்தாரோ அவற்றில் சிலவற்றை பிற்காலத்தில் எம் மாவீரர்களின் உயிர்த்தியாகத்தாலும் வீரம் செறிந்த போராட்டத்தாலும் மட்டுமே அடைய முடிந்தது. எமது பலத்தின் அடிப்படையில்தான் எமது மக்களைப் பாதுகாக்கவும் எமது நிலங்களை மீட்கவும் முடிந்தது. அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க முடிந்தது. தமிழர்களின் ஒன்றுபட்ட பலமே இவற்றை அடைவதற்கான கருவியாக அமைந்தது.

ஆனால் இன்று இலங்கை தேசம் தமிழ் இனத்தின் பலத்தினை அனைத்துலகச் சமூகத்தினதும் அயல்தேசத்தினதும் உதவிகளுடன் மிகக் கொடூரமாக, மானிட விழுமியங்களுக்குப் புறம்பாக சிதைத்திருக்கின்றது.

இன்று தமிழர்களின் பலம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் சிங்களதேசம் மீண்டும் தன்கொடூரப் பார்வையினை தமிழர் தேசமெங்கும் செலுத்தி வருகின்றது. நில ஆக்கிரமிப்பு, அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், தமிழர் அடையாளங்களை அழித்தல், சிங்கள – பெளத்த அடையாளங்களை நிறுவுதல் என ஒரு முற்றுமுழுதான இன அழிப்பினை மிக வேகமாகத் தொடங்கியுள்ளது.

இந்தப் பேரழிவு நடவடிக்கைகள் மூலம் தமிழர் தாயகத்தை முழுமையாக சிங்கள மயப்படுத்தி தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கான அடிப்படைகளை இல்லாது செய்வதன் ஊடாக எம் இனத்தையே முற்றுமுழுதாகக் கருவறுக்கும் செயலில் இலங்கை லங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

சிங்களமயம்…

அன்று தியாகி திலீபன் முன்வைத்துப் போராடிய கோரிக்கைகள் அனைத்தும் இன்றும் பொருந்திப் போகும் நிலையிலேயே ஈழத் தமிழினம் உள்ளது. இன்றும் கல்விக் கூடங்களிலும் வணக்கத்தலங்களிலும் இராணுவம், புதிதுபுதிதாக இராணுவ – காவல்துறை நிலையங்கள், அவசரகாலச் சட்டத்தின் தொடர்ச்சியும் அதன்கீழான கைதுகளும் வதைகளும் காணாமற்போதல்களும், புனர்வாழ்வு – அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் சிங்களக் குடியேற்றங்களும் என்றவாறு தாயகத்தில் எம்மினத்தின் மீதான வதை தொடர்கிறது. இருபத்துமூன்று ஆண்டுகளின் முன்னர் தியாகி திலீபன் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலைக்கு காலம் சுழன்று வந்துள்ளது.

அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே,

நாம் ஓர் இக்கட்டான சூழலில், பேரிடரில் சிக்கியுள்ளோம் என்பதனை நாம் அறிவோம். இவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டவேளையில்தான் தியாக தீபம் திலீபன் அவர்கள் தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். எதிரிகளின் சூட்சிகளை அம்பலப்படுத்தி மக்களை மாயையிலிருந்து விடுவித்து அணிதிரளச் செய்தார். திலீபன் அவர்களின் கோரிக்கைகள் மட்டுமன்றி அவரின் போராட்ட வழிமுறையும்கூட இன்றும் தொடரப்பட வேண்டியதாகவே உள்ளது.

புலம்பெயர் தேசங்களில் எமது மக்களின் சாத்வீக வழியிலான போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. நடைப்பயணங்கள், கவன ஈர்ப்பு நிகழ்வுகள் என்றவாறு பல்வேறு இடங்களில் எமது மக்களின் போராட்டங்கள் கவனத்தைப் பெற்றுள்ளன. இப்போராட்டங்கள் இன்னும் வீறுடனும் எழுச்சியுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். உலகின் மனச்சாட்சியை எமது போராட்டங்கள் தட்டியெழுப்ப வேண்டும். மிகக்கொடுமையான முறையில் அநீதி இழைக்கப்பட்ட எமது இனத்துக்கான நீதியைக் கேட்டு நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை தீரமுடன் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தேவைக்கேற்ப, காலச் சூழலுக்கேற்ப எமது விடுதலைப் பயணத்தில் போராட்ட வடிவங்கள் மாறிவந்துள்ளன. தியாகி திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் இதற்கு மிகப்பெரிய சான்று. புலம்பெயர் நாடுகளில் எமது மக்களின் சாத்தியப்பட்ட போராட்ட வடிவமாக சாத்வீக வழிமுறையே உள்ளது. இவ்வழிமுறையை இறுகப்பற்றி எமது விடுதலைப் பயணத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தமது கடமையை தொடர்ந்தும் எழுச்சியுடன் செய்ய வேண்டும்.

அவ்வகையில், அனைவரும் ஒன்றுபட்டு தாயகத்தில் முற்றுமுழுதாக இன அழிவிற்குள்ளாகி இருக்கும் எம் மக்களையும் மண்ணையும் காக்க வேண்டும்; எமக்கான காலத்தை நாமே உருவாக்க வேண்டும். தியாகி திலீபன் அவர்களின் கனவும் அதுவே. எழுச்சிகொண்ட மக்களின் அணிதிரள்வையும் அவர்களின் போராட்டத் தொடர்ச்சியையுமே அவர் வேண்டி நின்றார். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்பதே அவரின் அவாவாக இருந்தது. அந்த அடிப்படையில் எமது இலட்சியத்தை அடைவதற்காக நாம் ஒன்றுபட்டுப் பயணிப்போம் என தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று உறுதி எடுப்போமாக என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: